Tamil News  /  Tamilnadu  /  12 Districts Are Likely To Receive Heavy Rain At One Or Two Places Today
கனமழை
கனமழை

Today Weather Update : மக்களே.. இந்த 12 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்.. இதில் உங்க பகுதி இருக்கா?

27 May 2023, 6:28 ISTDivya Sekar
27 May 2023, 6:28 IST

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (மே 27) சில இடங்களிலும், நாளை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 29, 30-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

இன்று தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளிலும், வரும் 28, 29-ம் தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும்இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

நேற்று அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், வேலூர், திருத்தணியில் தலா 106 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம் 105 டிகிரி, பாளையங்கோட்டை, புதுச்சேரியில் தலா 104 டிகிரி, திருச்சி, மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், மதுரை, பரங்கிப்பேட்டையில் 102 டிகிரி, நாமக்கல், காரைக்கால், ஈரோடில் 101 டிகிரி, கரூர் பரமத்தி, தூத்துக்குடி, திருப்பத்தூர், சேலம் ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெயில் பதிவானது.

நேற்று அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 7 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு அணையில் 6 செ.மீ., ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் 4 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்