’இந்த கேள்விக்கு பதில் சொன்னால் ஒரு மில்லியன் டாலர் பரிசு!’ முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த அதிரடி அறிவிப்பு!
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு கருத்தரங்கு தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சிந்துவெளி எழுத்து வடிவ நாகரிகம் குறித்து விளக்கம் அளிக்கும் அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலர் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
2021-ஆம் ஆண்டு நம்முடைய அரசு அமைந்ததும், ‘திராவிட மாடல் அரசு’ என்று நாங்கள் அதற்கு பெயர் சூட்டினோம். “இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு” என்று குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் முதிர்ச்சியின், அறிவுச்செயல்பாடாக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் இப்போது கொண்டாடி இருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், இப்படி ஒரு விழாவை அரசே முன்னின்று நடத்தாது என்று சொல்லத்தக்க வகையில், மாபெரும் பண்பாட்டுப் பெருவிழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
திருப்புமுனையை தந்த ஆய்வு முடிவு
இந்தக் கருத்தரங்கத்தில் வெளிநாடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இருபதுக்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு ஆய்வறிக்கைகள் வழங்க இருப்பது எனக்கு பெருமிதமாக இருக்கிறது. சிந்துவெளி நாகரிகம் முதன்முதலில் 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் நாளன்று உலகுக்கு அறிவிக்கப்பட்டது. தி இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸ் என்ற இதழில் இந்தியத் தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல் சர் ஜான் மார்ஷல் அதை அறிவித்தார். இது இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கி, நம்முடைய கடந்த காலத்தை பற்றிய புரிதலையே மாற்றி அமைத்தது.