Saidai Duraisamy's Son: ’மாயமான மகன் குறித்து தகவல் தந்தால் ஒரு கோடி பரிசு’ சைதை துரைசாமி அறிவிப்பு
“சட்லெஜ் நதிக்கரையோரம் வசிக்கும் பழங்குடியின மக்களிடமும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்”
காணாமல் போன தனது மகன் குறித்து தகவல் அளித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். சட்லெஜ் நதிக்கரையோரம் வசிக்கும் பழங்குடியின மக்களிடமும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.
நேற்று முன் தினம் மாலையில் (04-02-2024) இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் சென்ற கார் விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார். அவர்கள் சென்ற இன்னோவா கார் ஆனது சட்லெஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரை இயக்கிய ஓட்டுநர் செந்தில் என்பவர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆற்றில் விழுந்த ஆனால் வெற்றி துரைசாமி எங்கிருக்கிறார் என்று தெரியாததால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை இமாச்சல பிரதேச போலீசார் தமிழ்நாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு குழு உதவி உடன் வெற்றி துரைசாமியை தேடும் பணி நடந்து வருகிறது.
சீட் பெல்ட் போட்டு இந்ததால் இறந்த நிலையிலும் கார் ஓட்டுநர் உடல் மீட்கப்பட்டது. அவரது நண்பர் கோபிநாத்தும் சீட் பெட்ல் போட்டு இந்ததால் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் காரில் பயணித்த வெற்றி துரைசாமி சீட் பெல்ட் போடவில்லை என கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் ஏற்பட்ட ரத்தக்கரை உள்ளிட்டவற்றை கொண்டு பரிசோதனை நடந்து வருகிறது. மேலும் சட்லெஜ் நதிக்கரையில் உள்ள மக்கள் உதவி உடன் அவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் தனது மகன் வெற்றி துரைசாமி குறித்த தகவலை சொன்னால் ஒரு கோடி ரூபாய் சன்மானம் தருவதாகவும், இந்த தகவலை சட்லெஜ் நதிக்கரையோரம் வசிக்கும் பழங்குடி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.