WPL: யுபி வாரியர்ஸ் பெளலிங் படையிடம் அடங்கிய மும்பை! முதல் தோல்வியை தவிர்குமா?
மகளிர் ஐபிஎல் தொடரில் இதுவரை ஆல்அவுட் ஆகாத அணியாக வலம் வந்த மும்பை இந்தியன்ஸ் அணியை, துல்லியமான பெளலிங் மூலம் ரன் குவிப்பில் ஈடுபடவிடாமல் கட்டுப்படுத்தியதுடன் அந்த அணியின் அனைத்து பேட்டர்களையும் அவுட்டாக்கியது யுபி வாரியர்ஸ்.
மகளிர் ஐபிஎல் 15வது போட்டி மும்பை இந்தியன்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை மகளிர் ஐபிஎல் தோல்வியை சந்திக்காத அணியாக மும்பை இருந்து வரும் நிலையில், அந்த அணியை யார் வீழ்த்த போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதையடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் பெளலிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஓபினிங் பேட்டர் ஹேலி மேத்யூஸ். ஒரு புறம் இவர் அதிரடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்ட வந்தாலும், மற்ற டாப் ஆர்டர் பேட்டர்களான யஸ்திகா பாட்யா 7, நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினர்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் வழக்கமாக தனது பார்மை தொடர்ந்து ரன்வேட்டையில் ஈடுபட்டார். இதற்கிடையே சிறப்பாக பேட் செய்து வந்த மேத்யூஸ் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த அமெலியா கெர் 3 ரன்னில் நடைய கட்டினார்.
இருப்பினும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளருடன் இணைந்து இஸ்ஸி வோங் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதனால் விக்கெட் சரிவு இருந்தபோதிலும் ரன்களும் ஒருபுறம் உயர்ந்தன.
ஹர்மன்ப்ரீத் 25 ரன்னில் அவுட்டான நிலையில், அடுத்த வந்தவர்கள் ஒற்றை இலக்க ரன் மட்டும் எடுத்து பெவிலியனுக்கு நடையை கட்டினார். கடைசி கட்டத்தில் கொஞ்சம் அதிரடி காட்டி வந்த இஸ்ஸி வோங் 32 ரன்களில் ஆட்டமிழக்க மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
யுபி பெளலர்களில் அற்புதமாக பந்து வீசிய சோஃபி எக்லெஸ்டோன், 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராஜேஷ்வகி கெய்க்வாட், தீப்தி ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.