தமிழ் செய்திகள்  /  Sports  /  Wpl Eliminator Miw Vs Upw Clash Today Which Team Will Advance To The Final

WPL Eliminator: MIW vs UPW இன்று மோதல்-பைனலுக்கு முன்னேறப்போவது எந்த அணி?

Manigandan K T HT Tamil
Mar 24, 2023 06:45 AM IST

Mumbai Indians Woman vs UP Warriors: இறுதி சுற்றில் இரு அணிகள் மட்டுமே மோத வேண்டும் என்பதால் ஒரு அணியை வெளியேற்றுவதற்கான (எலிமினேட்) ஆட்டம் இன்று (மார்ச் 24) நடைபெறவுள்ளது.

யு.பி. கேப்டன் அலிசா, மும்பை கேப்டன் கவுர்
யு.பி. கேப்டன் அலிசா, மும்பை கேப்டன் கவுர்

ட்ரெண்டிங் செய்திகள்

இளம் பெண்கள் கிரிக்கெட்டை தங்கள் கெரியராக எடுத்துக் கொள்ள டபிள்யூபிஎல் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மகளிர் ப்ரீமியர் லீக் நிச்சமாக உந்து சக்தியாக இருக்கும் என நம்பலாம்.

மொத்தம் 5 அணிகள் உருவாக்கப்பட்டன. மும்பை இந்தியன்ஸ், யு.பி. வாரியர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் களத்தில் இறங்கின.

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா, யு.பி. வாரியர்ஸ் கேப்டனாக அலிசா ஹீலி, டெல்லி கேப்டனாக மெக் லான்னிங், குஜராத் கேப்டனாக ஸ்னே ராணா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

குஜராத்தும், பெங்களூர் அணியும் புள்ளிப் பட்டியலில் டாப் 3 இடத்துக்கு வராத காரணத்தில் வெளியேறிவிட்டன.

மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கம் முதலே ஜெயித்து முதலிடத்தில் நீடித்து வந்தது.

எனினும், கடைசி கட்டத்தில் யு.பி.வாரியர்ஸ் அணியிடம் ஒரு முறையும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மற்றொரு முறையும் ஆட்டமிழந்தது.

மொத்தம் 8 ஆட்டங்களில் விளையாடி 6 ஆட்டங்களில் ஜெயித்து ரன் ரேட் அடிப்படையில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது மும்பை இந்தியன்ஸ்.

அதேநேரம், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி அதே 6 வெற்றிகளைப் பெற்று ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்து நேரடியாக பைனலுக்கு முன்னேறியது.

புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெறும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறிவிடும்.

அதேநேரம், 8 ஆட்டங்களில் விளையாடி 4இல் மட்டுமே வெற்றி கண்ட யு.பி.வாரியர்ஸ், 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

வெளியேற்றுதல் சுற்று

இறுதி சுற்றில் இரு அணிகள் மட்டுமே மோத வேண்டும் என்பதால் ஒரு அணியை வெளியேற்றுவதற்கான (எலிமினேட்) ஆட்டம் இன்று (மார்ச் 24) நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும், 3வது இடத்தில் உள்ள அலிசா தலைமையிலான யு.பி. வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.

நவி மும்பையில் டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடெமி மைதானத்தில் இந்த ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டத்தில் ஜெயிக்கும் அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் பைனல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதும்.

லீக் ஆட்டங்களில் தலா 2 முறை மோதியபோது ஒரு ஆட்டத்தில் மும்பையும், மற்றொரு ஆட்டத்தில் யு.பி. வாரியர்ஸ் ஜெயித்தன.

மும்பை அணி கேப்டன் கவுர் நல்ல ஃபார்மில் உள்ளார். பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் பிரமாதப்படுத்தும் வகையில் மும்பை அணி செயல்பட்டு வருகிறது.

அதேபோல், யு.பி.வாரியர்ஸையும் குறைந்து மதிப்பிட்டுவிட முடியாது.

அந்த அணியில் கிரேஸ் ஹாரிஸ் அணிக்கு பெரும் பலமாக இருக்கிறார். சேஸிங் செய்ய வேண்டி வந்தால் மும்பை அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் பெரும் சவால் அளிப்பார். லீக் ஆட்டங்களிலேயே மிரட்டியவர். பைனலுக்கு செல்ல வேண்டிய முக்கியமான ஆட்டம் என்பதால் எதிரணியை அவரது பேட்டிங்கால் அச்சுறுத்த வாய்ப்புள்ளது.

யு.பி. வாரியர்ஸ் அணியில் ஷப்னிம் இஸ்மாயில், எக்லெஸ்டோன், தீப்தி சர்மா ஆகிய பந்துவீச்சாளர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

இதனால், மும்பை வீராங்கனைகள் தனி வியூகத்துடன் பேட்டிங்கில் விளையாட வேண்டும்.

முதல் மகளிர் ப்ரீமியர் லீக்கில் எந்த அணி பைனலில் டெல்லியுடன் மல்லுக்கட்ட போகிறது என்பது இன்றிரவு தெரிந்து விடும்.

யு.பி.யும் மும்பையும் சமபலம் வாய்ந்த அணி என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது.

ஜியோ சினிமா செயலி, ஸ்போர்ட் 18 சேனலில் நேரலையில் இந்தப் போட்டியை கண்டு ரசிக்கலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்