WPL 2023: கடைசி ஓவரில் 22 ரன்கள்! ஆர்சிபி பெளலர்களை துவம்சம் செய்த குஜராத்
குஜராத் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் பேட்டிங் செய்த அனைவரும் முடிந்த பங்களிப்பை வெளிப்படுத்திய நிலையில் அந்த அணி 188 ரன்கள் குவித்துள்ளது.
மகளிர் ஐபிஎல் தொடரின் 16வது போட்டி ஆர்சிபி - குஜராத் ஜெயிண்ட் இடையே பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆர்சிபி அணி ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், குஜராத் அந்த வாய்ப்பை பெறுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க பேட்டர் சோபியா டங்க்லி அதிரடி தொடக்கத்த அளித்தபோதிலும், 16 ரன்னில் அவுட்டானார். பின்னர் வந்த சப்பினேனி மேகனா மற்றொரு ஓபனிங் பேட்டர் லாரா வோல்வார்ட்டுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
31 ரன்கள் எடுத்த நிலையில் மேக்னா அவுட்டாக, தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசி ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்த வோல்வார்ட் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவருடன் ஆஷ்லே கார்ட்னரும் இணைந்து அதிரடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
இதனால் அணியின் ஸ்கோரானது உயர்ந்து கொண்டே இருந்தது. ஆர்சிபி பெளலர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் பவுண்டரிகளாக குஜராத் பேட்டர்கள் விளாசி தள்ளினர். ஓபனிங் பேட்டர் வோல்வார்ட் அரைசதம் அடித்த பின்னர் 68 ரன்னில் அவுட்டானார்.
அதேபோல் மறுபக்கம் சிறப்பாக பேட் செய்து வந்த ஆஷ்லே கார்ட்னரும் 41 ரன்களில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் பேட் செய்ய வந்த தாயளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல் ஆகியோர் அணிக்கு சிறப்பான பினிஷிங்கை அளித்தனர்.
கடைசி ஓவரில் மட்டும் இருவரும் இணைந்து 22 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு குஜராத் அணி 188 ரன்கள் குவித்துள்ளது.