தமிழ் செய்திகள்  /  Sports  /  Wpl 2023 Well Bowling By Mumbai Indians Women Royal Challengers Bangalore Scored 125

WPL 2023: பந்துவீச்சில் கலக்கிய மும்பை இந்தியன்ஸ்.. 125 ரன்களில் சுருண்ட RCB

Manigandan K T HT Tamil
Mar 21, 2023 05:08 PM IST

RCBW vs MIW: 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களில் சுருண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

புன்னகையுடன் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள்
புன்னகையுடன் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள் (@mipaltan)

ட்ரெண்டிங் செய்திகள்

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.

கேப்டன் ஸ்மிருதி மந்தனா 25 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அமெலியா கெர் வீசிய பந்தில் யஸ்டிகா பாட்டியாவிடம் அவர் கேட்ச் ஆனார். இந்த ஆட்டத்திலும் அவர் சோபிக்கவில்லை.

மற்றொரு தொடக்க வீராங்கனை சோபி டிவைன் டக் அவுட்டாகி வெளியேறினார். எல்லிஸ் பெர்ரி நிதானமாக விளையாடியபோதிலும் 38 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தபோது பிரண்ட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.

ஹெதர் நைட் (12 ரன்கள்), கனிகா அஹுஜா (12 ரன்கள்) ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்வரிசையில் விளையாடிய ஸ்ரேயங்கா பாட்டீல், மேகன் ஸ்சுட் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர். கடைசி நம்பிக்கையாக இருந்த ரிச்சா கோஷ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவ்வாறாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களில் சுருண்டது.

அதிகபட்சமாக அமெலியா கெர் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளையும், பிரண்ட், வோங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

120 பந்துகளில் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி விளையாடி வருகிறது.

மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கடைசி கட்டம் நெருங்கி விட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், யு.பி.வாரியர்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸுடன் ராயல் சேலஞ்சர்ஸ் விளையாடியபோது தோல்வியைத் தழுவி இருந்தது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் யு.பி. வாரியர்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடுகிறது.

இன்றுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது.

யு.பி வாரியர்ஸுடன் ஏற்கனவே டெல்லி விளையாடிய ஆட்டத்தில் டெல்லி ஜெயித்தது.

அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க யு.பி. முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்