WPL 2023: ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட அணி எது தெரியுமா?
WPL: மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை வாங்குவதற்கான ஏலம் நேற்று நடைபெற்றது.
மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஐந்து அணிகளுக்கான ஏலம் நேற்று மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 5 அணிகளை ஏலம் விட்டதன் மூலம் பிசிசிஐக்கு ரூ. 4,670 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆடவருக்கு ஐபிஎல் தொடர் ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. கோடிக்கான ரூபாய் செலவழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், பல சிறந்த வீரர்களையும் அடையாளம் காட்டும் வகையில் ஐபிஎல் தொடர் திகழ்கிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டுக்கு ரசிகர்களும் அதிகம். இந்நிலையில், மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டை இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
அதன் படி, சமீபத்தில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டை ஒளிபரப்புவதற்கான ஏலமும் விடப்பட்டு 2023-2027 வரை ஒளிபரப்ப வயாகாம் 18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு உரிமம் பெற்றது.
இந்நிலையில், 5 ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் விடப்பட்டது. அதன்மூலம், ரூ.4,670 கோடி கிடைத்துள்ளது.
இதனை பிசிசிஐ கெளரவ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது 2008ஆம் ஆண்டு ஆடவர் ஐபிஎல்-க்கு கிடைத்த தொகையை விட அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏலத்தில் மொத்தம் 16 நிறுவனங்கள் பங்கேற்றது. அதிகபட்சமாக ஆமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி நிறுவனம் வாங்கியுள்ளது.
அடுத்தபடியாக மும்பை அணி ரூ.912.99 கோடிக்கு இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனமும், பெங்களூரு அணியை ரூ.901 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி அணியை ரூ.810 கோடிக்கு ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் கிரிக்கெட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
லக்னோ அணியை ரூ.757 கோடிக்கு கேப்ரி குளோபல் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் வாங்கியிருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸை தவிர, வேறு எந்த ஆடவர் ஐபிஎல் நிர்வாகமும் அணிகளை வாங்க முன்வரவில்லை. சென்னையை மையமாகக் கொண்டும் மகளிர் ஐபிஎல் அணி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.