தமிழ் செய்திகள்  /  Sports  /  Why You Didn't Play In The Series Against Srilanka Ishaan's Immediate Answer To Rohit's Question

ஏன் இலங்கை தொடரில் விளையாடவில்லை?-ரோகித்தின் கேள்விக்கு இஷானின் உடனடி பதில்

Manigandan K T HT Tamil
Jan 19, 2023 10:42 AM IST

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.

சுபமன் கில், ரோகித் சர்மா, இஷான் கிஷன்
சுபமன் கில், ரோகித் சர்மா, இஷான் கிஷன் (BCCI)

ட்ரெண்டிங் செய்திகள்

கேப்டன் ரோகித் சர்மா 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுபமன் கில் இரட்டை சதம் விளாசினார்.

மிக இளம் வயதிலேயே இரட்டை சதம் விளாசி அவர் சாதனை படைத்தார்.

1971ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 4,507 ஒரு நாள் ஆட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த 52 ஆண்டுகால வரலாற்றில் பதிவான 10வது இரட்டை சதம் இதுவாகும்.

இதில், 7 இரட்டை சதம் இந்திய வீரர்கள் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இறுதியில் வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் மற்றொரு இளம் வீரரான இஷான் கிஷன் 210 ரன்கள் அடித்து இந்த லிஸ்ட்டில் இணைந்தார்.

இதுவரை இந்திய கேப்டன் ரோகித் சர்மா 3 முறை இரட்டை சதங்களை விளாசியிருக்கிறார்.

இந்நிலையில், முதல் ஒரு நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு ஐதராபாத் மைதானத்தில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சுபமன் கில் ஆகியோர் ஒன்றாக ஜாலியாக கலந்துரையாடினர்.

அப்போது ரோகித் சர்மா, இரட்டை சதம் அடித்த பிறகும் ஏன் இலங்கைக்கு எதிரான 3 ஒரு நாள் ஆட்டங்களில் அணியில் ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை என்று ஜாலியாக கேட்டார்.

இதையடுத்து, இஷான் கிஷன் அண்ணே, இதை நீங்கதான் சொல்லனும், நீங்கதான் கேப்டன் என்று உடனடியாக பதிலளித்தார்.

இதையடுத்து, இஷான் கிஷனும், சுபமன் கில்லும் நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுவது போல் ரோகித்தை பார்த்து சிரித்தனர்.

நேற்றைய ஆட்டத்தில் இஷன் கிஷன் விக்கெட் கீப்பராக செயல்பட்டதுடன் 4வது வீரராக களமிறக்கப்பட்டார்.

அதுகுறித்து ரோகித் கூறுகையில்,"அது பரவாயில்லை. எந்த வரிசையில் இறங்கினாலும் கற்றுக் கொள்ள விஷயம் இருக்கிறது" என்றார்.

உடனே இஷன் கிஷனை பார்த்து, 4வது வரிசையில் இறங்குவது ஓகே தானே என்று கேட்டார். அதற்கு இஷன் கிஷன் உற்சாகமாக "யெஸ். எனக்கு 4வது பேட்ஸ்மேனாக களமிறங்குவதும் பிடித்திருக்கிறது" என்று பதிலளித்தார்.

பின்னர், இரட்டை சதம் பதிவு செய்தது எப்படி இருந்தது என்று சுபமன் கில்லிடம் ரோகித் சர்மா கேட்க, அதற்கு சுபமன் கில், "நான் மிகவும் சிறப்பானதாக உணர்ந்தேன். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதலாவது மற்றும் மூன்றாவது ஆட்டத்தில் நான் மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்யவில்லை.

ஆனால், இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் அதைச் செய்திருக்கிறேன்"என்றார்.

இரட்டை சதம் விளாசிய சுபமன் கில்
இரட்டை சதம் விளாசிய சுபமன் கில் (PTI)

முன்னதாக, சுபமன் கில்லை பார்த்து நீங்கள் தான் இரட்டை சதத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். இஷான் ஏன் பக்கத்தில் நிற்கிறார் என்று ஜாலிமாக ரோகித் சர்மா கேட்க மூவரும் புன்னகை செய்தனர்.

மேட்ச் விளையாடுவதற்கு முன் வழக்கமாக என்ன செய்வீர்கள் என்று கில்லை பார்த்து இஷான் கேட்க, ரோகித் குறுக்கிட்டு, "நீங்கள் ரெண்டு பேரும் ரூம்ல ஸ்டே பண்ணி இருக்கீங்க. உங்களால தான் சொல்ல முடியும்" என்றார்.

இதையடுத்து கில், "என்னை இஷான் தூங்கவே விடமாட்டார். சப்தத்தை அதிகப்படுத்தி படம் போட்டு பார்த்துக் கொண்டிருப்பார். தினமும் நாங்கள் சண்டை போட்டுக் கொள்வோம். இஷானிடம் கேட்டால், இது என் ரூம் நான் எப்படி இருப்பேனோ அப்படி தான் இருப்பேன் என்பார்" என்று சிரித்தபடியே கில் கூறுகிறார்.

WhatsApp channel

டாபிக்ஸ்