அரவணைப்பு, உற்சாகம், சாதனை! ஸ்பெஷலாக அமைந்த கோலியின் 100வது டெஸ்ட்
கிரிக்கெட் கேரியரில் சிறப்பு வாய்ந்த 100வது டெஸ்டில் சதம் அடிக்காவிட்டாலும் சாதனை மேற்கொள்வதை தொடர்ந்த விராட் கோலி, களத்துக்கு வெளியே செய்த அந்த சின்ன செயல் மூலம் ரசிகர்களின் மனதை டச் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷத்தின் மறுஉருவாக்கமாக திகழ்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. களத்தில் அவர் இறங்கிவிட்டால் வெளிப்படும் ஒரு விதமான நெருப்பு ஃபில் அனைவரையும் தொற்றிக் கொள்ளும். ஆட்டத்தின்போது இருக்கும் ஆக்ரோஷத்தைப் போல் ஆட்டத்துக்கு வெளியே ரசிகர்களிடம் கொட்டி தீர்க்கும் விதமாக அன்பும் என்னிடம் அதிகமாக உள்ளது என்பதை பல தருணங்களில் வெளிகாட்டியுள்ளார் கிங் கோலி.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வமற்ற 12வது வீரர் என்று அழைக்கப்படும் தரம்வீர் பால் என்பவருக்கு, இலங்கைக்கு எதிராக மெஹாலியில் நடைபெற்ற தனது 100வது டெஸ்ட் ஆட்டத்தின்போது அணிந்த டி-ஷர்ட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். மாற்றுத்திறனாளியான இந்த தரம்வீர்சிங் பால் இந்தியா விளையாடும் போட்டிகளில் பவுண்டரிக்கு பறந்து வரும் பந்துகளை அதிக வேகமாக சென்று வீரர்களிடம் எடுத்து தருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். பால் பாயாக இருந்து வந்த இவர் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் சார்பில் அறிவிக்கப்படாத 12வது வீரராக இந்தியா விளையாடும் போட்டிகளில் பங்கேற்று வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்து வரும் இவரிடம் தனியொரு அன்பை பல தருணங்களில் வெளிக்காட்டி வந்த கோலி, தற்போது 100வது டெஸ்ட் போட்டியின்போது பயன்படுத்திய டி-ஷர்ட்டை கொடுத்துள்ளார்.
கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த தன்னை தேடி வந்து டி-ஷர்ட்டை தன்னிடம் கொடுத்து சென்ற கோலிக்கு நன்றி சொல்லி அகமகிழ்ந்துள்ள தரம்வீர்சிங், அந்த வீடியோவையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த சிறிய நிகிழ்வு தற்போது அதிகமாக பகிரப்பட்டு விராட் கோலியின் அன்பு பாதையை மீண்டுமொரு வெளிச்சம்போட்டு காட்டி ரசிகர்களின் மனதை டச் செய்துள்ளது.
தனது கேரியரில் சிறப்புமிக்க 100வது டெஸ்ட் போட்டியை என்றும் நினைவு வைத்துக்கொள்வது போல் சதம் விளாசி ரசிகர்களை மகிழ்விக்காமல் போனாலும் சாதனை மேற்கொள்ளும் பழக்கத்தை கைவிடவில்லை. 76 பந்துகளில் 45 ரன்கள் மிகவும் கூலாக விளாசிய கோலி, இலங்கை வீரர் லசித் எம்புல்டெனியா மாயாஜால சுழலில் கிளீன் போல்டாகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சர்ப்ரைசான பந்து திரும்பியதை சரியாக கணிக்காமல் போல்டானது கோலிக்கு மட்டுமல்ல அவரது 71வது சதத்தை எதிர்நோக்கி நீண்ட நாள்களாக காத்திருக்கும் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றமே.
ஆனாலும் தான் அடித்த 45 ரன்களில் டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 8 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை புரிவதை அவர தவறவில்லை. இதுவரை 68 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பு வகித்த பின்னர், ஹோஹித் கேப்டனில் ஸ்பெஷலைஸ்ட் பேட்ஸ்மேனாக களமிறங்கிய கோலி தனது ஸ்டைல் ஆட்டத்தை எந்த டென்ஷனும் இல்லாமல் கூலாக விளையாடினார் என்றே சொல்ல வேண்டும்.
போட்டி தொடங்குவதற்கு முன்னரே 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் 12வது இந்திய வீரர் என்று பெருமையை பெற்ற கோலிக்கு, அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் பாராட்டும், நினைவு பரிசும் வழங்கி கெளரவப்படுத்தினார்.
இந்தப் பெருமையுடன் களமிறங்கி, 8000 ரன்கள் மைல்கல்லை கடந்த சாதனையையும் தனது ரெக்கார்ட் புக்கில் சேர்த்துக்கொண்டார்.
எப்போதும் களத்தில் துடிப்புடன் இருக்கும் கோலி, வீரர்கள் துவண்டு போகாமல் இருக்க அவர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். வீரர்கள் மட்டுமல்லாமல் போட்டியை காண வரும் ரசிகர்களிடம் இந்த உற்சாக டானிக் கொடுப்பதை கோலி தவறுவதில்லை. பேட்டிங்கில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் பீல்டிங்கில் கலக்கிய கோலி, ரசிகர்களிடம் வீரர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக கரகோஷம் எழுப்புமாறு கோரிக்கை வைத்து, "கேட்கல இன்னும் சத்தமா" என்று அவர் சொன்னது வேற லெவல் வைப்ரேஷனை டிவியில் பார்த்தவர்களுக்கு அளித்தது.
அப்புறம் மிக முக்கியமாக பிரபலங்களிடம் ஒட்டிக்கொண்ட புஷ்பா ஃபிவர், கோலியையும் விட்டுவைக்கவில்லை. பேட்டிங், பவுலிங் என ஆல்ரவுண்டு பெர்பான்மென்சில் கலக்கிகொண்டிருந்த ஜடேஜா விக்கெட் வீழ்த்திய போது புஷ்பா ஸ்டைல் மேனரிசம் செய்து கலக்கினார்.
"கடந்த 10 முதல் 11 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக டெஸ்ட், ஒரு நாள், டி20 என்று மூன்று வகை போட்டிகளிலும், ஒவ்வொரு ஆண்டுகளிலும் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்ற எனது பயணம் மிகவும் கடினமானது மட்டுமல்லாமல் சவால் மிக்கதாகவும் இருந்தது. இதுநாள் வரை எனது உடல் தகுதியை பார்த்துக்கொண்டதற்கு நன்கு மிகவும் பெருமைகொள்கிறேன். குறிப்பாக 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதென்பது தனிப்பட்ட முறையில் நான் மேற்கொள்ளும் சோதனையில் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்" என்று இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து தெரிவித்தார் கோலி.
இந்திய கிரிக்கெட் அணியில் பல கனவுகளோடு களம் இறங்க இருக்கும் இளம் வீரர்கள் பீட்னஸ் குறித்த கோலியின் இந்த வார்த்தை நிச்சயம் உந்து சக்தியாகவே இருக்கும்.