காத்திருக்கும் கடுமையான சவால்..சையத் மோடி சர்வதேச தொடர் இறுதி போட்டிக்கு பி.வி. சிந்து தகுதி! கலவை இரட்டையரிலும் வெற்றி
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, உன்னதி ஹூடாவை வீழ்த்தி சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதி போட்டியில் சிந்துவுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் 2024 தொடர் இந்தியாவிலுள்ள லக்னோவில் நடைபெற்று வருகிறது. பிடபிள்யூஎஃப் உலக டூர் சூப்பர் 300 தொடரில் ஒன்றாக அங்கம் விகிக்கும் இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் வெற்றியாளரான பி.வி. சிந்து, 17 வயது இளம் வீராங்கனையான உன்னதி ஹூடாவை வீழ்த்தினார்.
பி.வி. சிந்து ஆதிக்கம்
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பி.வி. சிந்து 21-12, 21-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். மொத்த 35 நிமிடங்கள் இந்த போட்டி நீடித்தது. இதையடுத்து பி.வி. சிந்து இறுதிப்போட்டியில் சீனாவின் லுவோ யூ வோ என்பவரை எதிர்கொள்ள இருக்கிறார்.
கலவை இரட்டையர்
கலவை இரட்டையர் பிரிவு போட்டியில் துருவ் கபிலா மற்றும் தனிஷா க்ராஸ்டோ ஜோடி 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சீனாவின் சோ ஜி ஹாங் மற்றும் யாங் ஜியா யி ஜோடியை வீழ்த்தியது. இதையடுத்து தாய்லாந்து ஜோடியான டெச்சபோல் புவரனுக்ரோ மற்றும் சுபிஸ்ஸாரா பாவ்சம்பிரான் ஜோடியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது.
மகளிர் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி 18-21, 21-18, 21-10 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் பென்யபா ஐம்சார்ட் - நுண்டகர்ன் அய்ம்சார்ட் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆண்கள் பிரிவு போட்டிகள்
ஆண்களுக்கான இரட்டையர் அரையிறுதியில், பிரூத்வி கிருஷ்ணாமூர்த்தி ராய் மற்றும் கே.சாய் பிரதீக் ஜோடி 21-17, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் இஷான் பட்நாகர்-சங்கர் பிரசாத் உதயகுமார் ஜோடியை தோற்கடித்தது.
மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் அஸ்வினி பொன்னப்பாவுடன் தனிஷாவும், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் லக்ஷயா சென் மற்றும் பிரியான்சு ரஜாவத் ஜோடியும் விளையாடவுள்ளனர்.
கம்பேக் தருவாரா பி.வி.சிந்து
இந்த ஆண்டில் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது சுற்றில் வெளியேறிய பி.வி. சிந்து, பின்னர் அக்டோபரில் பின்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆர்டிக் ஓபன் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். அதன் பிறகு நடைபெற்ற டென்மார்க் ஓபன் காலிறுதி வரை சென்று தோல்வியை தழுவினார்.
இந்த சீசனில் தொடர்ந்து தோல்வி முகத்தை சந்தித்து வரும் பி.வி. சிந்து, தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் சையத் மோடி பேட்மிண்டன் தொடரில் இறுதிப்போட்டி வரை தகுதி பெற்றுள்ளார். எனவே கோப்பை வறட்சி போக்கி பி.வி. சிந்து கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவியுள்ளது.
சையத் மோடி பேட்மிண்டன் தொடர்
2009ஆம் ஆண்டு முதல் சையத் மோடி பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த தொடரின் 15வது பதிப்பு நவம்பர் 26 தொடங்கி டிசம்பர் 1 வரை நடைபெறுகிறது. 2024 பிடபிள்யூஎஃப் உலக டூரில் 37வது தொடராக இது அமைந்துள்ளது. இந்த தொடரின் மொத்த பரிசு தொகையாக அமெரிக்க டாலர் 210,000 உள்ளது. ஒற்றையர் பிரிவு வெற்றியாளருக்கு 15,750 அமெரிக்க டாலர்களும், இரட்டையர் பிரிவு வெற்றியாளருக்கு 16,590 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபிரிவிலும் இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், சீனா, வியட்நாம், அயர்லாந்து, அஜர்பைஜான், வியாநாம், இலங்கை, பின்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
டாபிக்ஸ்