ஏமாற்றிய பி.வி. சிந்து, பிரணாய்.. இரண்டு தொடர் தோல்வி.. சுதிர்மான் கோப்பை தொடரில் வெளியேற்றம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  ஏமாற்றிய பி.வி. சிந்து, பிரணாய்.. இரண்டு தொடர் தோல்வி.. சுதிர்மான் கோப்பை தொடரில் வெளியேற்றம்

ஏமாற்றிய பி.வி. சிந்து, பிரணாய்.. இரண்டு தொடர் தோல்வி.. சுதிர்மான் கோப்பை தொடரில் வெளியேற்றம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 30, 2025 04:40 PM IST

வெற்றிக்காக தடுமாறி வரும் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி. சிந்து மற்றும் எச்.எஸ். பிரணாய் மற்றொரு ஏமாற்றம் அளிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பிடபிள்யூஎஃப் சுதிர்மன் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் வலிமையான இந்தோனேசியாவிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.

ஏமாற்றிய பி.வி. சிந்து, பிரணாய்.. இரண்டு தொடர் தோல்வி.. சுதிர்மான் கோப்பை தொடரில் வெளியேற்றம்
ஏமாற்றிய பி.வி. சிந்து, பிரணாய்.. இரண்டு தொடர் தோல்வி.. சுதிர்மான் கோப்பை தொடரில் வெளியேற்றம்

இதையடுத்து இந்தோனேஷியாவுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா 1-4 என்ற கணக்கில் தோல்வியுற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கிற நிலையில் இருந்த இந்தியா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியுற்றது.

பி.வி.சிந்து, பிரணாய் தோல்வி

இந்தோனேஷியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் கலவை இரட்டையர் சுற்று போட்டியில் துருவ் கபிலா மற்றும் தனிஷா கிராஸ்டோ இந்தியாவுக்காக களமிறங்கினார்கள். இந்தோனேஷியா ஜோடி ரெஹான் நௌபால் குஷார்ஜான்டோ மற்றும் குளோரியா இமானுவேல் விட்ஜலா ஆகியோருக்கு எதிராக 10-21 21-18 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்த இந்த கடினமான போட்டியில், இந்தியா ஜோடி தோல்வியில் தொடங்கினாலும் அடுத்த இரண்டு செட்களை தன்வசமாக்கியது

இதன் பின்னர் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, உலக அளவில் 11வது இடத்தில் உள்ள புத்ரி குசுமா வர்தானியை எதிர்கொண்டார். பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 12-21 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார் பி.வி. சிந்து. 38 நிமிடங்கள் வரை இந்த போட்டியானது நீடித்தது.

இதைத்தொடர்ந்து ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நட்சத்திர வீரரான எச்.எஸ். பிரணாய், ஜோனதான் கிறிஸ்டியை எதிர்கொண்டார். முதல் ஆட்டத்தில் 21-19 என்ற கணக்கில் முன்னிலை வகித்த பிரணாய், தனது அடுத்த இரண்டு ஆட்டத்தில் உலக அளவில் 30வது இடத்தை பிடித்திருக்கும் கிறிஸ்டிக்கு எதிராக பின் தங்கினார்.

இதன் பிறகு பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், பிரியா கொஞ்ஜெங்பாம் மற்றும் ஸ்ருதி மிஸ்ரா ஆகியோர் லானி ட்ரியா மாயாசாரி மற்றும் சிட்டி ஃபாடியா சில்வா ராமதாந்தி ஜோடிக்கு எதிராக 10-21, 9-21 என முழுமையாக சரண்டர் ஆனார்கள்.

இறுதியாக ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் ஹரிஹரன் அம்சகருணன் மற்றும் ரூபன் குமார் ரத்தினசபாபதி ஜோடி, இந்தோனேஷியாவின் டாப் ஜோடிகளான முஹம்மது ஷோஹிபுல் ஃபிக்ரி மற்றும் டேனியல் மார்ட்டின் ஆகியோரை எதிர்கொண்டனர். இந்திய ஜோடிகள் போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும் 20-22 18-21 என்ற கணக்கில் தோல்வியுற்றது. மொத்தம் 50 நிமிடங்கள் வரை இந்த போட்டி நீடித்தது.

ஸ்டார் வீரர்களான பி.வி. சிந்து, பிரணாய் ஆகியோரின் தோல்வி இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் டென்மார்க் அணிக்கு எதிராக இந்தியா 1-4 என தோல்வியுற்றது. தற்போது இந்தோனேஷியாவுக்கு எதிராகவும் தோல்வியை தொடர்ந்துள்ளது.

இந்தியா தடுமாற்றம்

சுதிர்மான் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் சிறந்த செயல்பாடாக 2011, 2017 ஆகிய தொடர்களில் காலிறுதி வரை தகுதி பெற்றதே ஆகும். இந்தியாவின் சுதர்மான் கோப்பை கனவு இந்த முறையும் கனவாகவே மாறியுள்ளது. கடந்த 2022இல் தாமஸ் கோப்பை, கடந்த ஆண்டில் பேட்மிண்டன் ஆசியா மகளிர் அணி சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றது இந்தியா. இதன் பின்னர் சுதிர்மான் கோப்பை மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இரண்டு தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.

இந்தியாவில் பார்மில் இருக்கும் ஆண்கள் இரட்டையர்களான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த தொடரில் இருந்து பின்வாங்கியுள்ளனர். அதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் பார்மில் இருக்கும் த்ரீசா மற்று காயத்ரி ஜோடி காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இந்த ஜோடிகள் இல்லாமல் சுதிர்மான் கோப்பையை விளையாடி வரும் இந்தியா தடுமாற்றம் கண்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே பேட்மிண்டன் ஆசியா கலவை அணிகள் சாம்பியன்ஷிப்பில் இந்தியா பின்னடைவு சந்தித்து வருகிறது.