HBD Mahela Jayawardene: இலங்கை அணியில் 18 ஆண்டுகள் ஆடிய வீரர்! தனித்துவமான சாதனைகளுக்கு சொந்தக்காரர்
இலங்கை கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்ற வகை கிரிக்கெட்டில் விளையாடிய வீரரான மஹேலா ஜெயவர்த்தனே, அந்த அணிக்காக பல்வேறு முதல் சாதனைகளை படைத்த வீரராகவும், உலக கிரிக்கெட்டில் சில தனித்துவமான சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் உள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக 1997 முதல் 2015 வரை 18 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய வீரர் ஜெயவர்த்தனே. முதல் முறையாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். அதன் காரணமாகவோ என்னாவோ இந்திய கிரிக்கெட் அணி அவரது பேவரிட் கிரிக்கெட் அணியாகவே இருந்துள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் இவர் சிம்ம சொப்பனமாகவே இருந்துள்ளார்.
இலங்கை அணிக்காக 652 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜெயவர்த்தனே, அந்த அணிக்காக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 374 ரன்கள் தென்ஆப்பரிக்காவுக்கு எதிராக அடிக்கப்பட்டது. இதுவே இன்று வரையிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வலது கை பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்து வருகிறது.
சக வீரரான சங்ககாரவுடன் இணைந்து தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 624 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். தனது கிரிக்கெட் கேரியரில் மூன்றாவது விக்கெட்டுக்காக இலங்கை அணியில் அதிக பார்ட்னர்ஷிப் குவித்த வீரராக இருந்துள்ளார். அத்துடன் ஜெயவர்த்தனே இருந்த காலகட்டத்தில் பெளலிங் முரளிதரன், கேட்ச் ஜெயவர்த்தனே என்ற இருக்கும் ஸ்கோர்கார்டு அதிகமாக பெளலர்-பீல்டர் காம்பினேஷனாக அமைந்திருந்தது.
இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மஹேலா ஜெயவர்த்தனே, சிறந்த Tactical கேப்டன் என பெயரெடுத்தார். 1996ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு 2007ஆம் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். தனது கேப்டன்சியில் 2008ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரை வென்றார். 2014ஆம் ஆண்டில் இலங்கை அணி முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்த அ்ணியில் முக்கிய வீரராக ஜெயவர்த்தனே இருந்துள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி, அரையிறுதி போட்டியில் சதமடித்த ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனையை தன் வசம் வைத்துள்ளார் ஜெயவர்த்தனே.
ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொச்சி டஸ்கர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளில் விளையாடியுள்ள ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். இலங்கை வீரர்களில் முத்தையா முரளிதரன், குமார சங்ககாரா ஆகியோரை தொடர்ந்து ஐசிசி Hall of Fameஇல் இணைக்கப்பட்ட இலங்கை வீரராக உள்ளார்.
தற்போது இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் தலைவராக இருந்து வரும் ஜெயவர்த்தனே இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.