INDvsAUS: மருத்துவமனையில் ஷ்ரேயாஸ் ஐயர் : இந்திய அணிக்கு திடீர் சிக்கல்!
Shreyas Iyer: மருத்துவமனையில் இருந்து திரும்பினால் மட்டுமே ஷ்ரேயாஷ் ஐயர் பங்கேற்க வாய்ப்பு என்பதால், அது கடைசி வரை சஸ்பென்ஸாகவே இருக்கும் என தெரிகிறது.
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அகமதாபாத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., அணி, 480 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவுக்கு சிறிது நேரம் வரை ஆடிய ஆஸி., அணி, இமாலய ரன்களை குவித்தது. அதன் பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, பொறுமையாக ரன்களை குவிக்க தொடங்கியது.
மூன்றாவது நாளில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில், ரோஹித் சர்மா 35, சுப்மன் கில் 128, புஜாரா 42, ஆகியோர் ஆட்டமிழந்தனர். நேற்று விராட் கோலி மற்றும் ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், கோலி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார். மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜடேஜா, பொறுப்பற்ற ஷாட் அடித்து 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பேட்டிங் ஆர்டர் படி, ஜடேஜாவுக்கு அடுத்ததாக ஷ்ரேயாஷ் ஐயர் தான் களமிறங்க வேண்டும். ஆனால், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பரத் களமிறங்கினார். நேற்றே, ஜடேஜா இறங்க வேண்டிய இடத்தில் ஷ்ரேயாஷ் ஐயர் தான் களமிறங்க இருந்தது.
ஆனால், அவருக்கு முதுகு தண்டு வடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால், நேற்று அவர் களமிறங்கவில்லை. இந்நிலையில் இன்று அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் அவர் களமிறங்கவில்லை.
இதற்கிடையில் தான், ஷ்ரேயாஷ் ஐயருக்கு முதுகு தண்டில் காயம் இருப்பதாகவும், அவர் ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனை சென்றிருப்பதாகவும் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.
அதிர்ச்சியான இந்த தகவல் மூலம், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி மட்டுமே களத்தில் உள்ளார். ஏற்கனவே இந்திய அணி, 150 ரன்களுக்கு மேல் பின்னிலையில் உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் ஜெயித்தால் தான் உலககோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியும்.
அதே போல் இந்த போட்டியில் ஜெயித்தால் தொடரை 3-1 என்று கைப்பற்றலாம். குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்தால் கூட, 2-1 என்று தொடரை வெல்ல முடியும். ஆனால், அதற்கு இந்திய அணி இன்று முழுக்க நிலைத்து ஆட வேண்டியிருக்கும்.
ஷ்ரேயாஷ் மாதிரியான பேட்டர் இல்லாமல், இது சாத்தியமா என்கிற கேள்விகளுடன் இன்றைய போட்டி நகர்கிறது. மருத்துவமனையில் இருந்து திரும்பினால் மட்டுமே ஷ்ரேயாஷ் ஐயர் பங்கேற்க வாய்ப்பு என்பதால், அது கடைசி வரை சஸ்பென்ஸாகவே இருக்கும் என தெரிகிறது.

டாபிக்ஸ்