India Open: பி.வி. சிந்து ஒரு மணி நேரம் போராட்டம் வீண்.. பதக்க நம்பிக்கையை தக்க வைத்த சாத்விக் - சிராக் ஜோடி
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பரபரப்பான போட்டியில் கொரிய ஜோடி ஜின் யோங் மற்றும் காங் மின் ஹியூக் ஆகியோருக்கு எதிராக போராடி வியர்வை சிந்திய இந்திய ஜோடி சாத்விக் மற்றும் சிராஜ் ஷெட்டி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள கேடி ஜாதவ் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரண் ஜார்ஜ் ஆகியோர் தோல்வியை தழுவி காலிறுதி போட்டியுடன் நாக் அவுட் ஆகி வெளியேறினார். இருப்பினும் இரட்டையர் பிரிவில் சாத்விக் - சிராக் ஜோடி இந்தியாவின் பதக்க கனவை தக்கவைத்துள்ளது.
போராடி வெற்றி
ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நடசத்திர ஜோடிகளான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, கொரிய ஜோடியான ஜின் யோங் மற்றும் காங் மின் ஹியூக் ஆகியோருக்கு எதிராக மோதியது. பரபரப்பான இந்த போட்டியில் முழு திறமையும் வெளிப்படுத்திய இந்திய ஜோடி, வியர்வை சிந்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 47 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-10, 21-17 என்ற புள்ளி கணக்கில் அரையிறுதிக்கு முன்னேறியது.
"தொடக்கத்திலிருந்தே, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதைத்தான் நாங்கள் செய்ய விரும்பினோம். நாங்கள் மட்டும் கொஞ்சம் வேகத்தை குறைத்திருந்தால் அவர்கள் அதை நன்கு பயன்படுத்தி இருப்பார்கள்.
எனவே எந்தவொரு சூழலிலும் அவர்கள் பக்கம் ஆட்டம் திரும்ப கூடாது என்றே நாங்கள் விரும்பினோம். இறுதி வரை எங்களது திட்டத்தில் இருந்து விலகாமல் ஆட்டம் வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி" என்று போட்டிக்கு பின்னர் சிராக் ஷெட்டி கூறினார்.
"எங்களது புள்ளிகளை நோக்கி அவர்கள் நெருங்கி வந்தாலும், நாங்கள் சௌகரியமாக ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், அவர்களால் மீண்டு வர முடியாது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். கடைசி மூன்று புள்ளிகளில் நாங்கள் செய்த தவறுகள்தான் எங்களை அவர்கள் நெருங்கி வர செய்தது" என்று போட்டிக்கு பின்னர் சாத்விக் கூறினார்.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது முறை இந்த ஜோடி இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியில் மலேசியாவின் மூன்றாவது சீட் வீரர்களான செய் ஃபெய் கோ மற்றும் நூர் இஸ்ருதீன் ஆகியோரை எதிர்கொள்ள உள்ளனர். இந்த ஜோடிக்கு எதிராக இந்திய ஜோடி 6-1 என்ற வெற்றி கணக்கில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
பி.வி. சிந்து, கிரண் தோல்வி
பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய ஸ்டார் வீராங்கனையான பி.வி. சிந்து, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தோனேஷியா வீராங்கனை கிரிகோரியா மாரிஸ்கா துன்ஜங்க்கு எதிராக மோதினார். கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய இந்த போட்டியில் முதல் சுற்றை பறிகொடுத்தார். பின்னர் இரண்டாவது சுற்றில் எழுச்சி பெற்ற சிந்து, இறுதி சுற்றில் போராட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் தோல்வியை தழுவினார். 21-9, 19-21, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் பி.வி. சிந்து வெற்றியை பறிகொடுத்தார். சுமார் ஒரு மணி நேரம் 2 நிமிடம் வரை இந்த போட்டி நீடித்தது.
இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் கிரண் ஜார்ஜ், சீனாவின் வெங் ஹாங் யாங்குக்கு எதிராக மோதினார். இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய சீன வீரர் 21-13, 21-19 என்ற நேர் செட்களில் கிரண் ஜார்ஜை வீழ்த்தினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்