Tamil News  /  Sports  /  Sania Mirza Australian Open:mixed Pair Of Sania Mirza-rohan Bopanna Storm Into Second Round
சானியா மிர்ஸா
சானியா மிர்ஸா (@AITA__Tennis)

Sania Mirza:ஆஸி., ஓபனில் ஒன்றில் தோல்வி, மற்றொன்றில் வெற்றி!சாதிப்பாரா சானியா?

22 January 2023, 10:56 ISTManigandan K T
22 January 2023, 10:56 IST

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் சீனியர் பிளேயர் சானியா மிர்ஸாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

கலப்பு இரட்டை பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஜோடியான ஜெய்மீ போர்லிஸ்-லூக் சாவில்லே இணையுடன் இந்தியாவின் சானியா மிர்ஸா இணை மோதியது.

முதல் செட் ஆட்டத்தில் பரபரப்புடன் காணப்பட்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அதிரடி காண்பித்தனர் போர்லிஸ் ஜோடி. எனினும், அனுபவத்தை பயன்படுத்தி சானியா மிர்ஸாவும், போபண்ணாவும் சிறப்பாக விளையாடி 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து, இரண்டாவது செட் ஆட்டத்தில் வேகம் எடுத்தது. அந்த செட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியா இணை விளையாடியது. எனினும், அந்த செட்டையும் 6-3 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றி இரண்டாவசு சுற்றுக்கு முன்னேறியது சானியா மிர்ஸா இணை.

ரோகன் போபண்ணாவுடன் சானியா
ரோகன் போபண்ணாவுடன் சானியா

மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வி

இதனிடையே, இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்ஸா இணை தோல்வியைச் சந்தித்தது.

கஜகஸ்தான் வீராங்கனை அன்னா டேனிலினாவுடன் இணைந்து சானியா மிர்ஸா இதில் பங்கேற்றார். பெல்ஜியம் வீராங்கனை அலிசன்-அன்ஹெலினா (உக்ரைன்) ஜோடியை சந்தித்தது சானியா ஜோடி.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை அலிசன் இணை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட சானியா இணை, இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி தலை நிமிர்ந்தது. இதையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் சூடுபறந்தது. அந்த செட்டை அலிசன் இணை, 6-2 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. சானியா இணை வெளியேறியது.

மீண்டும் சாதிப்பாரா சானியா?

ஒற்றையர் பிரிவில் சானியா இதுவரை கிராண்ட்ஸ்லாம் வென்றதில்லை. அதேநேரம், இரட்டை பிரிவில் ஆஸி., ஓபனில் 2016இல் சாம்பியன் பட்டம் வென்றார்.

2015இல் விம்பிள்டனிலும், அதே ஆண்டு யு.எஸ். ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் சானியா.

கலப்பு இரட்டையர் பிரிவிலும் ஆஸி., ஓபனில் ஒரே ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சானியா ஜோடி.

இதுதவிர, பிரெஞ்சு ஓபன், யு.எஸ்.ஓபனிலும் ஒரே ஒரு முறை கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் வென்றுள்ளார் சானியா என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்