தமிழ் செய்திகள்  /  Sports  /  Rahul Dravid Gill's Question About The Indore Dressing Room Unexpected Dravid Answers

Rahul Dravid: டிரெஸ்ஸிங் ரூம் பற்றி கில் கேட்ட கேள்வி..எதிர்பார்க்காத டிராவிட்!

Manigandan K T HT Tamil
Jan 25, 2023 08:20 AM IST

மூன்றாவது ஒரு நாள் போட்டி முடிந்ததும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இளம் வீரரான சுப்மன் கில்லிடம் பிசிசிஐ டிவிக்காக மைதானத்தில் நின்றபடி ஜாலியாக நேர்காணல் செய்தார்.

சுப்மன் கில், ராகுல் டிராவிட்.
சுப்மன் கில், ராகுல் டிராவிட். (BCCI)

ட்ரெண்டிங் செய்திகள்

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 360 ரன்களை குவித்த தொடக்க வீரர் கில் தனது சிறப்பான ஆட்டத்திற்கான காரணத்தையும் இந்த நேர்காணலில் ராகுல் டிராவிட்டிடம் தெரிவித்தார்.

சுப்மன் கில், அதிக ஸ்கோர்களை பெறாதபோது கில்லின் தந்தையின் வார்த்தைகளை ராகுல் டிராவிட் மீண்டும் இந்த நேர்காணலில் சுட்டிக் காட்டினார். "சுப்மன் நீங்கள் எங்களுக்கு தூறல்களை மட்டும் காட்டப் போகிறீர்களா அல்லது உண்மையான மழை மற்றும் இடியுடன் கூடிய மழையைக் காட்டப் போகிறீர்களா?" என்றார் சிரித்தபடியே.

அதைத் தொடர்ந்து பேசிய டிராவிட், "கடந்த இரண்டு மாதங்களாக உங்கள் தந்தை உங்களை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் இல்லையா? நீ்ங்கள் நிஜமாகவே ரன் மழையை பொழிந்துவிட்டீர்கள்" என்று கூற,

அதற்கு கில், "அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார். ஏனென்றால் நான் இன்று மீண்டும் இதே போன்று விளையாடி அதிக ஸ்கோரை எடுக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருப்பார்" என்றார்.

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தற்போது வரையிலான பயணம் எப்படி இருக்கிறது? என்று ராகுல் டிராவிட் கேட்டார்.

அதற்கு கில், "நீங்களும், கேப்டன் ரோகித் சர்மாவும் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். பல ஷாட்டுகளை அடித்து விளையாட முயற்சி செய்கிறேன். இப்போது வரை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது" என்றார்.

ராகுல் டிராவிட்டிடம் கில் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக எனது கிரிக்கெட் பயணத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டார்.

அதற்கு டிராவிட், "கடந்த 6 மாதங்களாக உங்களிடம் நல்ல அனுபவம் தெரிகிறது. நிறைய ரன்கள் எடுக்க வேண்டும் என்ற வேட்கையுடன் இருக்கிறீர்கள். நான் உங்களை இளம் வயதிலிருந்து பார்த்து வருகிறேன். உங்களுக்கு பேட்டிங் தான் ரொம்பப் பிடிக்கும். எப்போதுமே பேட்டிங் செய்ய வேண்டும். அதிக ஸ்கோரை விளாச வேண்டும் என்று நினைக்கிறீர்கள். பீலடிங் செய்யும்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது. குறிப்பாக ஸ்லிப்பில் நிற்கும் போது கேட்ச்களை தவறவிடாமல் பிடிக்கிறீர்கள்" என்றார்.

அதைத் தொடர்ந்து கில் கூறுகையில், "ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரைப் பார்த்து வளர்ந்தோம். நான் அவர்களை பார்த்து வியந்து இருக்கிறேன். தற்போது அவர்களுடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

இந்தூதர் ஸ்டேடியத்தில் உங்கள் பெயர் வைக்கப்பட்டுள்ள டிரெஸ்ஸிங் ரூமுக்குள் நுழைவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று ராகுல் டிராவிட்டிடம் கில் கேட்டார்.

அதற்கு ராகுல் டிராவிட், "இதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இது மிகவும் இதை நான் பெருமையாக கருதுகிறேன். சில நேரங்களில் சங்கடமாகவும் இருக்கும். நீண்ட ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட முடிந்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் தான் டிராவிட் பிறந்தார். பின்னர், அவரது குடும்பத்தினர் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். அங்கிருந்துதான் கிரிக்கெட் பயணத்தை ராகுல் தொடங்கினார்.

இந்தூரில் டிராவிட் பிறந்ததை கொண்டாடும் வகையில், அவரது பெயரை அங்குள்ள மைதானத்தின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சூட்டியுள்ளனர்.

இளம் வீரரான சுப்மன் கில், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து கலக்கி வருகிறார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா, தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட சுப்மன் கில், அதிரடி ஜாலம் நிகழ்த்தினார்.

நேற்று இந்தூரில் நடைபெற்ற கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் சுழன்றடித்த சூறாவளி போல், 78 பந்துகளில் 112 ரன்கள் அடித்து அசத்தினார் சுப்மன் கில். அதில் 5 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும்.

நியூசி.,-க்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் சுப்மன் கில், 40 ரன்கள் மட்டுமே எடுத்தார். இலக்கு மிகவும் குறைவு என்பதால் அவரது ஸ்கோரும் குறைந்துவிட்டது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார் கில்.

ஐதராபாத்தில் நடந்த முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 208 ரன்கள் விளாசி முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார் கில்.

WhatsApp channel

டாபிக்ஸ்