Venkata Datta Sai: பி.வி.சிந்துவை திருமணம் செய்து கொள்ளப் போவது இவர் தானா.. யார் இந்த வெங்கட தத்தா சாய்?
முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கும், வெங்கட தத்தா சாய்க்கும் டிசம்பர் 22-ம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யார் இந்த வெங்கட தத்தா சாய் என பார்ப்போம்.

இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து இந்த மாத இறுதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். எல்லா காலத்திலும் சிறந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவராக பரவலாக மதிப்பிடப்படும் சிந்து, சீனியர் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் டிசம்பர் 22 ஆம் தேதி உதய்பூரில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சிந்துவின் தந்தை பி.டி.ஐ.யிடம் கூறுகையில், ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் இறுதி செய்யப்பட்டது என்றும், ஜனவரி முதல் சிந்து பரபரப்பான 2025 சீசனைத் தொடங்குவதால் இந்த மாதத்தில் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் விரும்பினர் என்றும் கூறினார். "இரு குடும்பங்களும் ஒருவருக்கொருவர் தெரியும், ஆனால் ஒரு மாதத்திற்கு முன்புதான் எல்லாம் இறுதி செய்யப்பட்டது. ஜனவரி முதல் சிந்துவின் போட்டி அட்டவணை பரபரப்பாக இருக்கும் என்பதால் இது மட்டுமே சாத்தியமான நேரம்" என்று சிந்துவின் தந்தை பி.வி.ரமணா பி.டி.ஐ.யிடம் தெரிவித்தார்.
அதனால்தான் டிசம்பர் 22-ம் தேதி திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி டிசம்பர் 24-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அடுத்த பேட்மின்டன் சீசன் முக்கியமானதாக இருக்கும் என்பதால் அவர் விரைவில் தனது பயிற்சியைத் தொடங்குவார்" என்று அவர் மேலும் கூறினார்.
