HBD Mariyappan Thangavelu: இந்தியாவுக்காக பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற தமிழக மண்ணின் மைந்தன்
இந்தியாவுக்காக பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற தமிழக மண்ணின் மைந்தன் ஆக இருந்து வரும் மாரியப்பன் தங்கவேலுவின் பிறந்தநாள் இன்று.
மாரியப்பன் தங்கவேலு என்கிற இந்த பெயரை உலக தமிழர்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. 2016இல் ரியோவில் நடைபெற்ற கோடை கால பாரிலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை தேடித்தந்தார்.
2004ஆம் ஆண்டுக்கு பின்னர் பாரிலிம்பிக் விளையாட்டில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார் மாரியப்பன் தங்கவேலு.
தமிழக மண்ணின் மைந்தன்
சேலம் மாவட்டம் பெரிய வடக்கம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. மொத்தம் நான்கு அண்ணன்கள், ஒரு தங்கை என மாரியப்பன் உடன் பிறந்தவர்களாக இருந்து வரும் நிலையில், அவரது தந்தை சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மாரியப்பனின் தாயார் தான் செங்கல் சூளையில் பணிபுரிந்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியுள்ளார். தனது ஐந்தாவது வயதில் பேருந்து ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் மாரியப்பனின் வலது கால் செயல் இழந்து போனது.
விளையாட்டி ஆர்வம்
ஒரு கால் செயல் இழந்தபோதிலும், பள்ளி படிப்பின்போதே விளையாட்டின் மீது ஆர்வம் மிக்கவராக இருந்த மாரியப்பன், ஆரம்பத்தில் கைப்பந்து விளையாட்டில் நாட்டம் செலுத்தியுள்ளார். பின்னர் விளையாட்டு ஆசிரியரின் தூண்டுதலில் உயரம் தாண்டுதல் விளையாட்டில் தன்னை ஈடுபடுத்த தொடங்கியுள்ளார்.
14 வயதில் முதல் முறையாக தாண்டுதல் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தார். தற்போது மாரியப்பனின் பயிற்சியாளராக இருந்து வரும் சத்யநாரயணா தான் அவருக்கு தேசிய அளவில் அங்கீகாரத்தையும், பயிற்சி வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தார்.
முதல் பதக்கம்
2016இல் துனிசியாவில் நடைபெற்ற ஆண்கள் டி-42 உயரம் தாண்டுதல் போட்டியில் 1.78மீ உயரம் தாண்டிய மாரியப்பன், ரியோவில் நடந்த 2016 கோடை பாரிலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த போட்டியில் 1.89மீ தாண்டி தங்கம் வென்றார்.
இதைத்தொடர்ந்து நவம்பர் 2019இல் டி-63 உயரம் தாண்டுதல் நிகழ்வில் 1.80மீ உயரம் தாண்டி, 2019 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றார். துபாயில் நடந்த இந்த போட்டியில் வெண்கலம் வென்றார்.
தொடர்ந்து 2020இல் டோக்கியோவில் நடந்த 2020 கோடை பாரிலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
இந்தியாவை உலக அரங்கில் பெருமை பட வைத்த மாரியப்பன் தங்கவேலுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகளை வழங்கி கெளரவித்தது. அதேபோல் விளையாட்டு வீர்ரகளுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டு கெளவிக்கப்பட்டார்.
ஜகர்தாவில், 2018இல் நடந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் தேசிய கொடியை ஏந்தி, இந்திய அணிக்கு முன்மொழிந்து சென்றார் மாரியப்பன்.
தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை வைத்து தாயாருக்கு நிலம் வாங்கி கொடுத்துடன், தனியொரு வீட்டையும் கட்டி தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றினார்.
இந்தியாவுக்கு பாரிலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி என இரு பதக்கங்களையும், உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் பதக்கம் வென்றவராக இருந்து வரும் மாரியப்பன் தங்கவேலு பிறந்தநாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்