Olympics:‘சிங்கப்பெண்ணே..சாதனை மேல் சாதனை..’ மிரட்டிய மனு பாக்கர்- சரப்ஜோத்; இந்தியாவிற்கு மீண்டும் பதக்கம்!
Olympics: ஒலிம்பிக்கில், இன்று நடைபெற்ற 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறார்கள்.
மீண்டும் பதக்கம் வென்ற இந்தியா!
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோர் இன்று நடைபெற்ற 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் கலப்பு அணிகள் பிரிவில், வெண்கல பதக்கம் வென்று இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியா சார்பில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த திங்கள் கிழமை நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில், மனு சரப்ஜோத் இணை, தென் கொரியாவை 16 -10 கணக்கில் வீழ்த்தி, வெண்கல பதக்க போட்டிக்கு தகுதி பெற்று, இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினர்.
சாதனை மேல் சாதனை
கடந்த ஞாயிற்றுக்கிழமை, துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் துப்பாக்கி சுடும் வீரர் என்ற வரலாற்றை படைத்தார்.
ஆண்கள் பிரிவில் போட்டியிட்ட சரப்ஜோத் கடைசி நேரத்தில் வாய்ப்பை தவறவிட்டார். இந்த நிலையில் தற்போது மனு மற்றும் சரப்ஜோத் இணை வெண்கல பதக்கம் வென்று இருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டியில் பல பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் மனு பாக்கர்.
ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் இது வரை பல வீரர்கள் விளையாடி பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கின்றனர். அந்த பட்டியலில் கே.டி.ஜாதவ், மேஜர் தயான் சந்த், கர்ணம் மல்லேஸ்வரி, அபினவ் பிந்த்ரா (முதல் தனிநபர் தங்கப் பதக்கம் வென்றவர்), சாய்னா நேவால், சுஷில் குமார், பி.வி.சிந்து, நீரஜ் சோப்ரா மற்றும் பல வீரர்கள் அடங்குவர். இவர்களில் யாராலும், ஒரே ஒலிம்பிக்கில், பல பதக்கங்களை வென்ற சாதனையை பெற முடியவில்லை. அந்த சாதனையை 22 வயதில் மனு படைத்திருக்கிறார். இது மட்டுமல்ல, 25 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெற்றி பெற்று, ஹாட்ரிக் பதக்கம் வென்று இருக்கும் மனு இப்போது நினைத்துப் பார்க்க முடியாத சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
எங்கள் மீதான அழுத்தமும், அதிகமாக இருந்தது.
இந்த வெற்றி குறித்து பேசிய சரப்ஜோத் சிங், “ மிகவும் சிறப்பாக உணர்கிறேன். ஆட்டம் மிகவும் கடுமையானதாகவே இருந்தது. எங்கள் மீதான அழுத்தமும், அதிகமாக இருந்தது. இருப்பினும் வெண்கல பதக்கம் வென்றது மகிழ்ச்சியை தந்து இருக்கிறது.” என்று பேசினார்.
நாம் நம்முடைய கையில் இருப்பதை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும்.
மனு பாக்கர் பேசும் போது, “நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். அனைவரது அன்புக்கும், ஆசீர்வாதத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் நம்முடைய கையில் இருப்பதை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். இங்கு வருவதற்கு முன்னர், அப்பாவுடன் பேசினேன். கடைசி வரை போராடலாம் என்பதே என்னுடைய திட்டமாக இருந்தது” என்று பேசினார்.
இந்த சாதனையின் வாயிலாக, வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பிறகு, ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் மனு பாக்கர். இதே பிரிவில் செர்பியா அணியினர் தங்கமும், துருக்கி வெள்ளியும் வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்