T20 World Cup 2022: முதல் ஆட்டத்தில் நமீபியாவிடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  T20 World Cup 2022: முதல் ஆட்டத்தில் நமீபியாவிடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி

T20 World Cup 2022: முதல் ஆட்டத்தில் நமீபியாவிடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி

Karthikeyan S HT Tamil
Published Oct 16, 2022 06:48 PM IST

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் நமீபியாவிடம் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.

<p>நமீபியா, இலங்கை வீரர்கள். (AP)</p>
<p>நமீபியா, இலங்கை வீரர்கள். (AP)</p>

எட்டாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப்போட்டியின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பிரைலின்க் 28 பந்துகளில் 44 ரன்களும், ஜே.ஜே.ஸ்மித் அவுட் ஆகாமல் 16 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் மதுஷன் 2 விக்கெட்டுகளும், தீக்ஷனா, சமீரா, கருனாரத்னே, ஹசரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி, நமீபியா அணியின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

இலங்கை அணியின் தொடக்க வீரர் நிசங்கா 9 ரன்னுக்கும், மெண்டீஸ் 6 ரன்னிலும் அவுட்டாகினர். தனன்யா டிசெல்வா 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். குணதிலகா டக்அவுட் முறையில் வெளியேறினார். அதிகபட்சமாக கேப்டன் தசுன் ஷனகா 29 ரன்னும், பானுகா ராஜபட்சே 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினர். இதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 19 ஓவர் முடிவில் 108 ரன்களை மட்டுமே எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நமீபியா அணி தரப்பில் டேவிட் வைஸ், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ்,பென் ஷிகோங்கோ, ஜான் ப்ரைலின்க் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஆசிய சாம்பியன் அணியான இலங்கை டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.