KL Rahul: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடித்த கேஎல் ராகுல் - இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு
தொடையில் ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோவில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது பீல்டிங்கில் ஈடுபட்ட கேஎல் ராகுலுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. லக்னோ அணியின் கேப்டனான கேஎல் ராகுல் அந்தப் போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது காயத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால், ஐபிஎல் தொடரில் பாதியில் இருந்து விலகினார். காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டியிலும் விளையாடப்போவதில்லை என கேஎல் ராகுல் தனது இன்ஸ்டாவில் உருக்கமாக தெரிவித்தார்.
இதையடுத்து எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் லக்னோ அணியின் கேப்டனாக க்ருணால் பாண்ட்யா செயல்படுவார் அந்த அணி நிர்வாகம் தெரிவித்தது. அத்துடன் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டார்
இதைத்தொடந்து கேஎல் ராகுலுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதனை ராகுல் தனது இன்ஸ்டாவில் உறுதிபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்திருக்கும் பதிவில், "அனைவருக்கும் வணக்கம். எனக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.
இதை சிறப்பாக செய்து முடித்த மருத்துவர்களுக்கும், மருத்துவ குழுவினர்களுக்கும் நன்றி. விரைவில் இந்திய அணிக்காக விளையாடும் தருணத்தை எதிர்நோக்கியுள்ளேன். மீண்டும் களத்துக்கு திரும்பி எனது பங்களிப்பை நாட்டுக்காக அளிப்பதில் உறுதியாக உள்ளேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பேக் அப் விக்கெட் கீப்பராகவும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் அணியில் இடம்பிடித்திருந்தார் கேஎல் ராகுல். ஆனால் அவர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இடது கை பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவருடன் பேக்கப் வீரர்களாக சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் ஆகியோரும் உள்ளார்கள்.
தற்போது ஓய்வில் இருந்து வரும் கேஎல் ராகுல், முழு உடற்தகுதி பெற்று செப்டம்பரில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், 50 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்