Kapil Dev: '83' நாயகனுக்கு இன்று பிறந்த நாள்: அவரது முக்கியமான சாதனைகள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Kapil Dev: '83' நாயகனுக்கு இன்று பிறந்த நாள்: அவரது முக்கியமான சாதனைகள் இதோ..!

Kapil Dev: '83' நாயகனுக்கு இன்று பிறந்த நாள்: அவரது முக்கியமான சாதனைகள் இதோ..!

Manigandan K T HT Tamil
Jan 06, 2023 01:55 PM IST

'83' என்றாலே சட்டென்று அனைவருக்கும் நினைவுக்கு வருபவரான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு இன்று பிறந்த நாள். தற்போது அவருக்கு 64 வயது ஆகிறது.

வெவ்வேறு காலகட்டங்களில் கபில் தேவ்
வெவ்வேறு காலகட்டங்களில் கபில் தேவ்

சண்டீகரில் கடந்த 1959ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அவர் பிறந்தார்.

1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் விளையாடிய சிறந்த ஆட்டங்களைப் பார்ப்போம்.

டெஸ்ட் போட்டிகளில் 5,000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரரும் மற்றும் 400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த ஒரே கிரிக்கெட் வீரரும் கபில்தேவ் மட்டுமே. அவரது கிரிக்கெட் பயணத்தில், அவர் மொத்தம் 5,248 ரன்கள் குவித்தார் மற்றும் 434 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ், கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அற்புதமான மிடில்-ஆர்டர் பேட்டர் மற்றும் ஒரு உத்வேகமிக்க வேகப்பந்து வீச்சாளர் என இவருக்கு பல திறமைகள் உள்ளன. கபில் தேவ் இந்திய கிரிக்கெட்டில் ஒரு ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கொண்டு வந்த பெருமைக்குரியவர்.

சாதனைகள் பல…

1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றுத்தந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இறுதி ஆட்டத்தில் கபில்தேவ் தலைமையிலான படை பலம் வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியதை அப்போது யாரும் எளிதாக நம்பவில்லை.

பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் சார்பில் கெளரவிக்கப்பட்ட கபில் தேவ்
பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் சார்பில் கெளரவிக்கப்பட்ட கபில் தேவ் (PTI)

அவரது 16 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் 131 டெஸ்ட் மற்றும் 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

50 ஓவர் கிரிக்கெட்டில், கபில் தேவ் 3,783 ரன்களை பதிவு செய்து 253 விக்கெட்டுகளை எடுத்தார்.

ஜிம்பாப்வேக்கு எதிராக 138 பந்துகளில் 175 ரன்கள் (1983)

ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டம் 1983 உலகக் கோப்பையில் கபில் தேவ் விளையாடிய சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஒன்றாகும்.

அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்தியா வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் டாப் ஆர்டர் மொத்தமாக சரிவை சந்தித்தது. ஸ்கோர்போர்டு 17/5 என்ற நிலையில், கேப்டன் கபில் தேவ், களமிறங்கி வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

உலகக் கோப்பையுடன் கபில் தேவ்
உலகக் கோப்பையுடன் கபில் தேவ்

கபில் தேவ் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தார். இந்தியா 266 ரன்கள் எடுத்தது. அவர் 138 பந்துகளை எதிர்கொண்டு, 16 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை அடித்து நொறுக்கினார். இறுதியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆட்டத்தை மாற்றும் திறன் படைத்தவர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 180 பந்துகளில் 129 ரன்கள் (1992)

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இந்தியா தோல்வியைத் தழுவாமல் தடுக்க கபில் தேவ் மிகுந்த உறுதியுடன் விளையாடினார்.

இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணி 27/5 என தத்தளித்துக்கொண்டிருந்தபோது, கபில் ​​தேவ் உதவிக்கு வந்தார். மறுமுனையில் எந்த ஒரு பேட்டரும் நீண்ட நேரம் நிலைத்திருக்க முடியாவிட்டாலும் அவர் நிலைத்து நின்று ஆடினார். கபில் தேவ் 129 ரன்களில் ஆட்டமிழக்க, அவரது அணி 215 ரன்களை எடுக்க உதவியது. எனினும், இவர் சிறப்பாக விளையாடியபோதிலும் அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.

இங்கிலாந்துக்கு எதிராக 142 பந்துகளில் 110 ரன்கள் (1990)

டி20கிரிக்கெட் இல்லாத நிலையில், கபில் தேவ் 1990 ஆம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்ற அடித்து விளையாடினார். முதல் இன்னிங்ஸில், ரவி சாஸ்திரியின் பாராட்டத்தக்க 187 ரன் இந்தியாவின் இன்னிங்ஸுக்கு அடித்தளத்தை உருவாக்கியது. சூழ்நிலையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட கபில் தேவ், 142 பந்துகளில் 110 ரன்களை எடுத்தார்.

விருதுகள்

அவரது அதிரடியால் இந்தியா 606 ரன்களை குவித்தது. எனினும் அந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதுபோன்று இந்திய அணிக்காக எத்தனையோ ஆட்டங்களில் அவர் அதிரடியாக விளையாடியிருக்கிறார். இவரது சாதனைகளுக்காக பத்மஸ்ரீ, பத்ம பூஷண், அர்ஜுனா ஆகிய விருதுகளை மத்திய அரசு இவருக்கு வழங்கி கெளரவித்துள்ளது.

83 என்ற பெயரில் திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

'83' நாயகனை கிரிக்கெட் உலகம் ஒருபோதும் மறக்காது!

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.