Johor Open Chess : ‘வெற்றி மேல் வெற்றி’- ஜோஹர் ஓப்பன் செஸ்: தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் இனியன் சாம்பியன்!
Johor Open Chess: இறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன், வியட்நாம் கிராண்ட் மாஸ்டர் நூகுயான் வேன் ஹோயை வீழ்த்தினார். இதன் மூலம் 8 வெற்றி 1 டிரா என 8.5 புள்ளிகளுடன் கிராண்ட் மாஸ்டர் இனியன்.ப சாம்பியன் பட்டம் வென்றார்.

Johor Open Chess: 9-வது ஜோஹர் ஓப்பன் 2025 சர்வதேச செஸ் போட்டி 18.01.2025 முதல் 23.01.2025 வரை மலேசியாவில் நடைபெற்றது.
இதில் 8 நாடுகளை சார்ந்த 84 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 9 சுற்றுகளாக நடைபெற்ற இத்தொடரில் இறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன், வியட்நாம் கிராண்ட் மாஸ்டர் நூகுயான் வேன் ஹோயை வீழ்த்தினார். இதன் மூலம் 8 வெற்றி 1 டிரா என 8.5 புள்ளிகளுடன் கிராண்ட் மாஸ்டர் இனியன்.ப சாம்பியன் பட்டம் வென்றார்.
மற்றொரு இந்திய சர்வதேச மாஸ்டர் VS ராகுல் 7 புள்ளிகளுடன் 2 வது இடத்தை பிடித்தார். சீனாவின் சர்வதேச மாஸ்டர் லீ பூ 7 புள்ளிகளுடன் 3 வது இடம் பிடித்தார்.
முன்னதாக, சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான இனியன் பட்டம் வென்றுள்ளார். பல்வேறு நாடுகளில் இருந்து செஸ் வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தையும் இந்திய வீரர்களே வென்றுள்ளனர்.
மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற இந்த தொடரில் 7 வெற்றி 3 டிரா செய்துள்ளார் இனியன். 8.5 புள்ளிகளை பெற்ற அவர் சாம்பியன் ஆனார். இவருக்கு அடுத்தபடியாக எம்.ஆர். வெங்கடேஷ் இரண்டாவது இடத்தையும், ஐ.எம். அரோன்யா கோஷ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் இனியனுக்கு சக்தி குரூப் டாக்டர் என். மகாலிங்கம் கோப்பை வழங்கப்பட்டது. பட்டம் வென்ற இனியன் இரண்டு கிராண்ட் மாஸ்டர்கள், இரண்டு சர்வதேச மாஸ்டர்களை வீழ்த்தியுள்ளார். அத்துடன் ஒரு கிராண்ட் மாஸ்டர், 2 சர்வதேச மாஸ்டர்களுக்கு எதிரான போட்டியை ட்ரா செய்துள்ளார்.
யார் இந்த இனியன்?
ஈரோட்டை சேர்ந்தவரான இனியன் முழுப்பெயர் இனியன் பன்னீர் செல்வம். இந்தியா சார்பில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 71வது வீரராக உள்ளார். தற்போது சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே ரேட்டிங்கில் 2508 புள்ளிகளை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரான்ஸில் நடைபெற்ற லா-பிளாக்னே ஓபன் தொடரில் வெண்கலம் வென்றார். இதற்கு முன்னதாகவும் 2023இல் பிரான்ஸில் நடைபெற்ற கிரேயோன் ஓபன் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர்கள்
இந்திய செஸ் விளையாட்டின் தாயகமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. இதற்கு காரணமாக இந்தியாவில் உள்ள 108 கிராண்ட் மாஸ்டர்களில் 37 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான். 85 ஆண் கிராண்ட் மாஸ்டர்களில் 29 பேரும், 23 பெண் கிராண்ட் மாஸ்டர்களில் 8 பேரும் தமிழர்கள் தான்.
தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட் மாஸ்டர்கள் ஆனவர்களின் லிஸ்ட்: விஸ்வநாதன் ஆனந்த், சசிகிரண், ஆர்.பி.ரமேஷ், தீபன் சக்ரவர்த்தி, சுந்தர்ராஜன் கிடாம்பி, ஆர்.ஆர்.லட்சுமண், பி.மகேஷ் சந்திரன், எம்.ஆர்.வெங்கடேஷ், எஸ்.அருண் பிரசாத், பி.அதிபன், எஸ்.பி.சேதுராமன், எம்.ஷியாம் சுந்தர், வி.விஷ்ணு பிரசன்னா, கார்த்திகேயன் முரளி, வி.ஆர்.அரவிந்த் சிதம்பரம் மற்றும் அஸ்வின் ஜெயராம், கே.பிரியதர்ஷன், என்.நாத், ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ், பி.கார்த்திகேயன், என்.ஆர்.விசாக், இனியன்.ப, ஜி.ஆகாஷ், ஆர்.வைஷாலி ஆகியோர் உள்ளனர்.

டாபிக்ஸ்