MS Dhoni: தோனியை லெஜண்ட், தலைவா, கடவுள் என புகழ்ந்து தள்ளிய டெல்லி வீரர்கள்!-வைரல் வீடியோ
Chennai Super Kings: இஷாந்த் சர்மா, அக்சர் படேல் உள்ளிட்ட டெல்லி வீரர்கள் எம்.எஸ்.தோனி குறித்து ஒரு வார்த்தையில் பதிலளித்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 55-வது லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், டெல்லி கேபிட்டல்ஸும் மோதுகின்றன.
இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்த சீசனில் சிஎஸ்கேவை முதல் முறையாக சந்திக்கிறது டெல்லி.
டெல்லி வீரர்களிடம் எம்.எஸ்.தோனி குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள் என்று ஒவ்வொரு வீரராக கேட்கப்பட்டது.
இஷாந்த் சர்மா, அக்சர் படேல் உள்ளிட்ட டெல்லி வீரர்கள் எம்.எஸ்.தோனி குறித்து ஒரு வார்த்தையில் பதிலளித்தனர்.
இந்த வீடியோவை டுவிட்டரில் டெல்லி கேபிட்டல்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், "இஷாந்த் சர்மா, தோனியை 'பிக் பிரதமர்' என்றும், ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், தோனியை 'மிஸ்டர் கூல்' என்றும் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தோனியை ‘லெஜண்ட்’ என்றும், சர்ஃபராஸ் கான் தோனியின் ‘பிக் ஃபேன்’ என்றும் தெரிவித்தனர்.
டெல்லி இளம் வீரர்கள் தோனியை லெஜண்ட், தலைவா, கடவுள் எனவும் புகழ்ந்து தள்ளினர்.
ஐபிஎல் தொடரில் தோனி, 243 போட்டிகளில் விளையாடி 39.47 பேட்டிங் சராசரியுடன் 5,052 ரன்கள் எடுத்துள்ளார்.
அவர் 24 அரை சதங்கள், 348 பவுண்டரிகள் மற்றும் 237 சிக்ஸர்கள் விளாசி இருக்கிறார். அவரது சிறந்த தனிநபர் ஸ்கோர் 84* ஆகும்.
இந்த சீசனில் மிடில் ஆர்டர் வீரர்கள் ஆட்டமிழந்த பிறகு தோனி களமிறங்கி 10 போட்டிகளில் 76 ரன்களை எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 200-ஆக உள்ளது. சராசரி 76.00.
தோனி, சிஎஸ்கேவுடன் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து இணைந்து பயணித்து வருகிறார். அவருக்காகவே ரசிகர்கள் கூட்டம் போட்டி எங்கு நடந்தாலும் அங்கு திரண்டு விடும்.
தற்போது சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இதுவரை இந்த சீசனில் 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள சிஎஸ்கே, 6 ஆட்டங்களில் வெற்றியும் 4 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்துள்ளது. மொத்தம் 13 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் ஜெயித்தால் 15 புள்ளிகளைப் பெறும். இரண்டாவது இடத்திலேயே சிஎஸ்கே நீடிக்கும்.
சென்னை அணி இந்த சீசனில் மூன்று ஆட்டங்களில் சொந்த மண்ணில் ஜெயித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுடன் மட்டுமே தோல்வியைத் தழுவியது.

டாபிக்ஸ்