Virat Kohli: ஐபிஎல் தொடரில் 6வது சதம் - சாதனை மேல் சாதனை புரிந்திருக்கும் கோலி
18ஆம் எண் கொண்ட ஜெர்சி அணிந்திருக்கும் விராட் கோலி 18ஆம் நாளில் ஆட்டத்தின் 18வது ஓவரில் சதமடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இதை செய்த கோலி மேலும் சில சாதனைகளையும் புரிந்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 62 பந்துகளில் சதம் அடித்தார். இந்த சீசனில் அவரது முதல் சதமாகவும், ஐபிஎல் தொடர்களில் கோலிக்கு 6வது சதமாகவும் அமைந்துள்ளது.
இந்த சீசனில் ஆரம்பத்தில் நல்ல பார்மில் இருந்து வந்த கோலி, இடையில் சில போட்டிகளில் விரைவாக அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து ஹைதரபாத்துக்கு எதிராக கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். Vintage கோலியை ரசிகர்கர் பார்த்து கொண்டாடியிருக்கும் நிலையில், இந்த போட்டியில் பல்வேறு சாதனைகளையும் அவர் புரிந்துள்ளார்.
சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி சதமடித்திருப்பதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது 6வது சதத்தை அடித்துள்ளார். அத்துடன் ஆர்சிபி அணிக்காக 7500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ஒரு அணிக்காக 7 ஆயிரம் ரன்களுக்கு மேல் ஐபிஎல் போட்டிகளில் எந்த வீரரும் அடித்ததில்லை.
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் 500 ரன்களை விராட் கோலி பூர்த்தி செய்துள்ள கோலி டாப் 5 பேட்ஸ்மேன்கள் லிஸ்டில் இணைந்துள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஆறு முறை 500 ரன்கள் என்ற மைல் கல்லை கடந்த வீரர் என்ற சாதனை புரிந்துள்ளார்.
இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த ரோஹித் சர்மாவின் சாதனையை விராட் கோலி முறியடித்திருக்கிறார். இதுவரை விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் ஏழு சதம் அடித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்தவர்கள் லிஸ்டில் விராட் கோலி, கிறிஸ் கெயிலுடன் இணைந்துள்ளார். இருவரும் இதுவரை ஆறு சதங்களை அடித்துள்ளார்கள்.
டி20 கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு கிடைத்திருக்கிறது.
கடந்த 2016 சீசனில், மே 18ஆம் தேதி பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கோலி அட்டகாசமான சதம் அடித்தார். அதே நாளில் தற்போது மீண்டும் சதத்தை பதிவு செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.