KKR vs GT: விஸ்வரூபம் எடுத்த விஜய் சங்கர்! கொல்கத்தாவை பழிதீர்த்த குஜராத் முதல் இடத்துக்கு முன்னேற்றம்
அகமதாபாத்தில் பெற்ற தோல்விக்கு குஜராத் அணி, கொல்கத்தாவை அதன் உள்ளூர் மைதானமான ஈடன் கார்டனில் வைத்து பழிதீர்த்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் பெரிய இன்னிங்ஸை விளையாடாத விஜய் சங்கர் இந்த போட்டியில் விஸ்வரூபம் எடுத்து அதிரடி காட்டினார்.
ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
முன்னதாக முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. பேட்டிங்குக்கு சாதகமான இந்த மைதானத்தில் ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியில் 21 ரன்கள் குறைவாகவே கொல்கத்தா அணி அடித்தது.
இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய குஜராத் தொடக்க பேட்ஸ்மேன் சஹா 10 ரன்னில் அவுட்டாகி பெவிலியின் திரும்பினார். இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட சுப்மன் கில் மற்றும் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
ஹர்திக் பாண்ட்யா 26 ரன்களில் அவுட்டானார். அதேபோல் அதிரடியாக பேட் செய்து வந்த சுப்மன் கில் 49 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்ந்தபோதிலும் குஜராத் அணியின் ஸ்கோர் நல்ல நிலையிலேயே இருந்தது.
இதைத்தொடர்ந்து பேட் செய்த விஜய் சங்கர் - டேவிட் மில்லர் ஆகியோரும் தங்களது பங்களிப்பாக அதிரடியை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த சீசனில் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்தாமல் இருந்த விஜய் சங்கர் அரைசதம் விளாசினார். 24 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேபோல் டேவிட் மில்லரும் 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்றது,
தங்களது உள்ளூர் மைதானமான அ்கமதாபாத்தில் வைத்து கடைசி ஓவரில் வெற்றியை பறிகொடுத்தது குஜராத் அணி. இதைத்தொடர்ந்து தற்போது கொல்கத்தா அணியின் உள்ளூர் மைதானத்தில் 2.1 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற்று பழிதீர்த்து கொண்டது.
குஜராத் அணியின் ஸ்டிரைக் பெளலரான ரஷித் கான் ஓவரில் மொத்தம் 54 ரன்கள் அடிக்கப்பட்டது போல் கொல்கத்தாவில் ஸ்டிரைக் பெளலர் வருண் சக்கரவர்த்தி ஓவரிலும் 42 ரன்கள் விளாசப்பட்டது. இருவரும் இன்று விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்