GT vs MI: பைனலுக்கு தகுதி பெறப் போகும் அடுத்த அணி எது?-நடப்பு சாம்பியனா அல்லது 5 முறை சாம்பியனா?
IPL 2023: குவாலிஃபையர் 1 இல் தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் குஜராத், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸை இன்று எதிர்கொள்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று தகுதிச்சுற்று 2 (Qualifier 2) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் மும்பை-குஜராத் அணிகள் அகமதாபாத் நகரில் மோதுகின்றன.
இந்த ஆட்டம் 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) எனப்படும் ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடின.
லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்தன.
குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் சுற்று ஆகியவையும் முடிவடைந்தன. குவாலிஃபையர் 1-இல் சென்னை வெற்றி கண்டு, நேரடியாக பைனலுக்கு முன்னேறியது.
சிஎஸ்கே 10வது முறையாக பைனலுக்கு முன்னேறி அசத்தியது.
முன்னதாக, லீக் முடிவில் சிஎஸ்கே, குஜராத், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தன.
குவாலிஃபையர் 1 இல் தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் குஜராத், 5 முறை சாம்பியனான மும்பையை இன்று எதிர்கொள்கிறது.
லீக் ஆட்டம் ஒன்றில் குஜராத்தை எதிர்கொண்டது மும்பை. அகமதாபாத்தில் நடந்த அந்த ஆட்டத்தில் குஜராத் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து இம்மாதம் 12ம் தேதி மும்பையில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி கண்டது.
ஆக சொந்த மண்ணில் இரு அணிகளும் ஜெயித்துள்ளன. இதனால், இரு அணிகளுமே பதிலடி கொடுக்கு முயற்சிக்கும். அதைவிட இன்றைய ஆட்டத்தில் ஜெயிக்கும் அணி பைனலுக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் விடாப்பிடியாக மல்லுக்கட்டும்.
எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் முழு திறமையை வெளிப்படுத்திய நாங்கள் ஏன் 5 முறை சாம்பியன் என்பதை மீண்டும் உணர்த்தியது.
ஆகாஷ் மத்வால் 5 விக்கெட்டுகளை சுருட்டி அசத்தினார். அவர் நிச்சயம் இன்றைய ஆட்டத்தில் முக்கியப் பங்கு ஆற்றுவார் என எதிர்பார்க்கலாம்.
கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஷோகீன் என வலுவான பந்துவீச்சாளர்கள் மும்பை வசம் உள்ளனர்.
இஷான் கிஷன் எந்த நேரத்தில் பந்தை வெளுப்பார் என தெரியாது. திடீரென அவரும் ரோகித்தும் அதிரடி காண்பித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
கேமரூன் கிரீனும் நல்ல ஆட்டத்திறனுடன் இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் சொல்லவே வேண்டாம். அணிக்கு தேவைப்படும் சமயத்தில் சுற்றி சுற்றி அடித்து தூள் கிளப்புகிறார்.
இதனால், மும்பை அணி கவலையே இல்லாமல் தைரியமாக களமிறங்கும்.
குஜராத்தும் சற்றும் சளைத்ததல்ல. ஏதோ ஒரு சில ஆட்டங்களில் தோற்றிருந்தாலும் இந்தத் தொடரில் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக திகழ்கிறது.
ஹார்திக் பாண்டியா அருமையாக அணியை வழிநடத்தி வருகிறார். முகமது ஷமி அந்த அணிக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.இந்தத் தொடரில் இதுவரை 26 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப்பை தன்வசம் வைத்துள்ளார் ஷமி.
அதே அணியில் இடம்பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் ரஷித் கானும் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்து 2வது பவுலராக உள்ளார்.
அவர் இதுவரை 25 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார். நூர் அகமது, மோஹித் சர்மா ஆகியோரும் நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
பேட்டிங்கைப் பொருத்தவரை கில் எதிரணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். கில் இருந்தால் கஷ்டம் என எதிரணியை நினைக்க வைத்திருக்கிறார்.
இந் சீசனில் இதுவரை 722 ரன்களை குவித்திருக்கிறார். இன்னும் 9 ரன்களை எடுத்தால் ஆரஞ்சு கேப் அவர் வசம் சென்றுவிடும்.
730 ரன்களுடன் ஆர்சிபி கேப்டன் டு பிளெசிஸ் ஆரஞ்சு கேப்பை வைத்திருக்கிறார்.
இன்றைய ஆட்டத்தில் கில்லுக்கு ஆரஞ்சு கேப் வசமாகி விடும் என்பதில் ஆச்சரியப்படுத்த தேவையில்லை.
ரித்திமான் சாஹா தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செய்தாலும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை.
இன்றைய ஆட்டம் முக்கியமானது என்பதால் அவர் கில்லுக்கு ஓபனிங்கில் கைகொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
டேவிட் மில்லர், தசுன் ஷனகா, விஜய் சங்கர் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கின்றனர்.
உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில் பரபரப்புக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது.
இன்றைய ஆட்டத்தை ஜியோ சினிமாவில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.