HT Sports SPL: இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்று வரை அதிக ஸ்கோர் பதிவு செய்த டாப் 5 வீரர்கள்
IPL 2023: இந்த சீசனில் அவர் 36 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். அரை சதம் மட்டுமே 8 ஆகும். 2 முறை 30 + ரன்களை எடுத்துள்ளார் பிளெசிஸ்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த சீசனில் இதுவரை அதிக ஸ்கோரை விளாசிய டாப் 5 வீரர்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL)எனப்படும் ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடின.
லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்தன. லீக் முடிவில் சிஎஸ்கே, குஜராத், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
டு பிளெசிஸ்
இந்தத் தொடரில் அதிக ரன்களை எடுத்த பிளேயர் வரிசையில் முதலிடத்தில் கம்பீரமாக இருப்பவர் ஆர்சிபி கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ். இவர் 14 ஆட்டங்களில் விளையாடி 730 ரன்களை விளாசியிருக்கிறார்.
இந்த சீசனில் அவர் 36 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். அரை சதம் மட்டுமே 8 ஆகும். 2 முறை 30 + ரன்களை எடுத்துள்ளார் பிளெசிஸ்.
இவரது அதிகபட்ச ஸ்கோர் இந்த சீசனில் 84. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிளெசிஸ்ஸுக்கு வயது 38. ஆர்சிபி இந்தப் போட்டியில் லீக் சுற்றுடன் வெளியேறியது.
சுப்மன் கில்
நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸில் இடம்பிடித்துள்ள வீரர் சுப்மன் கில். இவர் அதிரடியாக விளையாடி வருகிறார். லீக் ஆட்டம் வரை கில் 680 ரன்கள் விளாசியிருக்கிறார். இந்தத் தொடரில் 2 சதங்களை விளாசியிருக்கிறார். அரை சதங்கள் 4 விளாசியிருக்கிறார். இவரது அதிகபட்சம் 104 நாட் அவுட்.
விராட் கோலி
மூன்றாவது இடத்தில் ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி உள்ளார். இவரும், ஃபாப் டு பிளெசிஸ்ஸும் சிறப்பாக விளையாடினர். கோலி மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடி 639 ரன்களை குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 101 நாட் அவுட். இவர் மொத்தம் 16 சிக்ஸர்களை இந்த சீசனில் பறக்கவிட்டுள்ளார். மேலும், 2 சதம், 6 அரை சதங்களை பதிவு செய்திருக்கிறார் 'கிங்' கோலி.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், மொத்தம் 625 ரன்களை குவித்துள்ளார்.
இவரது ஸ்டிரைக் ரேட் 163. மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடி 1 சதம், 5 அரை சதம் பதிவு செய்திருக்கிறார். 26 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
டெவன் கான்வே
இந்தப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளவர் டெவன் கான்வே. சிஎஸ்கே அணிக்காக ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடிய கான்வே, லீக் ஆட்டங்கள் வரை 585 ரன்களை குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 92 நாட் அவுட். மொத்தம் 16 சிக்ஸர்களை விளாசியிருக்கும் அவர், 6 அரை சதங்களை பதிவு செய்திருக்கிறார். இவர் நியூசிலாந்து வீரர் ஆவார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9