Most Valuable Player: மிகவும் மதிப்புமிக்க வீரர் விருதை வாங்கிய குஜராத் ஓபனிங் பேட்ஸ்மேன்!
Shubman Gill: தொடர் நாயகன் விருதையும் சுப்மன் கில் தட்டிச் சென்றார். நேற்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதை டெவன் கான்வே வென்றார்.
குஜராத் டைட்டன்ஸ் பேட்டர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 ஆரஞ்சு கேப் வைத்திருப்பவரான சுப்மன் கில், தனது கடின உழைப்பால் சரியான திசையில் செல்வதாக உணர்வதாக தெரிவித்தார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று ஐபிஎல் பைனல் போட்டி நடந்தது. டாஸ் வென்ற சிஎஸ்கே மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம் என்பதை கருதி பவுலிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி அதிரடியாக 214 ரன்களை குவித்து அமர்க்கப்படுத்தியது.
அதிரடியாக விளையாடி இதுவரை 3 சதங்களையும் 4 அரை சதங்களையும் பதிவு செய்த சுப்மன் கில்லை நேற்றைய ஆட்டத்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து ஆட்டமிழக்கச் செய்தார் சிஎஸ்கே விக்கெட் கீப்பரும், கேப்டனுமான தோனி.
கில், 20 பந்துகளில் 39 ரன்களை விளாசினார். ஆனாலும், அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 96 ரன்களை விளாசி அசத்தினார்.
எனினும் ஒட்டுமொத்தமாக 17 ஆட்டங்களில் விளையாடி 890 ரன்களை குவித்து ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார் சுப்மன் கில்.
அவரது ஸ்டிரைக் ரேட் 157.80. தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்த சுப்மன் கில், 2023 ஐபிஎல் சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரர் விருதை வாங்கினார்.
பின்னர், அவர் கூறியதாவது:
எனக்கு இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறேன். பைனலில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், இது ஆகச் சிறந்த ஆட்டமாக அமைந்தது. ஆட்டத்தை சிறப்பாக தொடங்க வேண்டும். நான் அதை சிறப்பாக செய்திருக்கிறேன். 40 ரன்கள், 50 ரன்கள் என எடுத்துக் கொண்டிருந்த நான், கடைசி கட்டத்தில் சதங்களாக மாற்றினேன். நிறைய பயிற்சி எடுத்திருக்கிறேன். யுக்திகளை மாற்றியிருக்கிறேன். குறிப்பாக இறுதிகட்ட ஓவர்களில் எப்படி விளையாட வேண்டும் என பயிற்சி பெற்றிருக்கிறேன். அது எனக்கு மிகவும் கைகொடுத்தது.
நான் அடித்த சதங்கள் எல்லாம் வித்தியாசமானவை. சன்ரைசர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி பவுலர்களை சரியான நேரத்தில் பயன்படுத்தி கட்டுப்படுத்தக் கூடியவர்கள். நான் பவுலர்களின் எண்ணத்தை கண்டுபிடித்து விளையாடினேன். சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆடினேன்" என்றார் கில்.
டாபிக்ஸ்