MI vs GT: கில்லியாக பேட் செய்த கில்! பைனலுக்கு செல்ல மும்பை அணி சாதனை இலக்கை செய்ய வேண்டும்
குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன் சுப்மன் கில் இந்த சீசனில் மூன்றாவது சதமடிக்க, ஐபிஎல் ப்ளேஆஃப் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை குஜராத் டைட்டன்ஸ் அணி இலக்காக மும்பை அணிக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் குவாலிபயர் 2 போட்டி குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் குவித்துள்ளது.
குஜராத் அணி ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய விருத்திமான் சஹா - சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 54 ரன்கள் குவித்த நிலையில் சஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
தனது அதிரடியை தொடர்ந்த சுப்மன் கில் ரன் வேட்டையில் ஈடுபட்டார். மும்பை பவுலர்களின் பந்து வீச்சை பறக்க விட்ட வான வேடிக்கை நிகழ்த்தி அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இவருடன் இணைந்து தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். அரைசதத்துக்கு பிறகும் தனது அதிரடியை தொடர்ந்த கில் 49 பந்துகளில் சதமடித்தார்.
இதன் மூலம் இந்த சீசனில் மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார். சுப்மன் கில் தனது இன்னிங்ஸில் 9 டாட் பால்கள் மட்டும் விட்டு கொடுத்தார்.
விடாது ரன்குவிப்பில் ஈடுபட்ட கில், 60 பந்தில் 129 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் பேட் செய்ய வந்த பாண்ட்யா சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிறப்பாக பேட் செய்து வந்த சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்த நிலையில், ரிட்டயர்டு அவுட்டாகி வெளியேறினார். இதனால் கடைசி ஓவரில் ரஷித் கான் பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டார். ரஷித்கான் 2 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குஜராத் அணி 1 முதல் 6 ஓவர் வரை 50 ரன்களும், 7 முதல் 15 ஓவர் வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 116 ரன்களும், 16 முதல் 20 வரையில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களும் எடுத்துள்ளது.\
மும்பை பெளலர்களில் கிறிஸ் ஜோர்டன், ஆகாஷ் மத்வால் ஆகியோர் முறை 56, 52 ரன்களை வாரி வழங்கினர். மத்வால் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தினார். ஜோர்டன் விக்கெட்டுகள் ஏதும் வீழ்த்தாத நிலையில் ரன்களை வாரி வழங்கியுள்ளார்.
குஜராத் அணி குவித்திருக்கும் 233 ரன்கள் இதுவரை ப்ளேஆஃப் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராக அமைந்துள்ளது.