Tamil News  /  Sports  /  Chennai Super Kings Vs Delhi Capitals 55th Matches
200வது ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடிய அம்பதி ராயுடு
200வது ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடிய அம்பதி ராயுடு (AFP)

Ambati Rayudu: ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 ஆட்டங்களில் விளையாடிய இந்திய வீரர்கள் லிஸ்ட்

10 May 2023, 22:44 ISTManigandan K T
10 May 2023, 22:44 IST

Chennai Super Kings: வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பொல்லார்டு 189 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 55வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், டெல்லி கேபிட்டல்ஸும் மோதுகின்றன.

இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

முதலில் விளையாடிய சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிஎஸ்கே 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்துள்ளது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி விளையாடி வருகிறது.

டெல்லிக்கு எதிரான இந்தப் போட்டி அம்பதி ராயுடுவுக்கு 200வது ஐபிஎல் போட்டியாகும். ஐபிஎல்-இல் 200 போட்டிகளில் விளையாடிய 9வது பிளேயர் அம்பதி ராயுடு ஆவார். பிற 8 வீரர்களும் இந்தியர்களே.

எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா ஆகியோர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடியிருக்கின்றனர்.

வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பொல்லார்டு 189 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

அம்பதி ராயுடு ஐபிஎல்-இல் 4000 ரன்களை விளாசியிருக்கிறார். டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே ஆகியோர் களம் புகுந்தனர்.

கான்வே இன்றைய ஆட்டத்தில் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அக்சர் படேல் பந்துவீச்சில் அவர் எல்பிடபிள்யூ ஆனார்.

ருதுராஜ் கெய்க்வாட் 24 ரன்களிலும், ரஹானே 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆல்-ரவுண்டர் மொயின் அலி 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஷிவம் துபே 3 சிக்ஸர்களை விளாசி 12 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார். அவரும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, அம்பதி ராயுடு 23 ரன்களில் நடையைக் கட்டினார்.

களத்தில் இருந்த ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார் 'தல' தோனி. அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ், கலீல் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

தோனி அவருக்கே உரிய ஸ்டைலில் 2 சிக்ஸர்களை விளாசினார். ஜடேஜா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸருக்கு அடிக்க முயற்சித்த போது அக்சர் படேலிடம் கேட்ச் ஆனார். கடைசி ஓவரில் தோனியும் ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர்களையும் 1 பவுண்டரி உள்பட 20 ரன்களை எடுத்தார்.

மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிஎஸ்கே 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்தது.

டாபிக்ஸ்