Chess: கிரேயோன் ஓபன் சர்வதேச செஸ் தொடர் - பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் இனியன்
கிரேயோன் ஓப்பன் சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டரான இனியன் சாம்பியன் பட்டம் வென்றார். முதல் இரண்டு இடத்தை இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் இருவர் பிடித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டிலுள்லுள்ள பார்டியூஸ் நகரில் கடந்த 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை 27வது கிரேயோன் ஓப்பன் 2023 சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம், சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த செஸ் தொடரில் 9 நாடுகளை சேர்ந்த 113 சர்வதேச வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தார் இனியன் பன்னீர் செல்வம்.
இதேபோல் மற்றொரு இந்திய கிராண்ட்மாஸ்டரான பரத் சுப்ரமணியம் இரண்டாவது இடமும், பிரான்ஸ் வீரர் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் கேரல் ஜோசப் மூன்றாவது இடமும் பிடித்தனர்.
ஈரோட்டை சேர்ந்த 20 வயதாகும் இனியன் பன்னீர் செல்வம், தனது 16வது வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன்மூலம் நாட்டின் 61வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமை பெற்றார்.
இவர் தனது 5 வயதிலிருந்து செஸ் விளையாட்டை விளையாடி வருகிறார். 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி பிறந்த இனியன், 2007ஆம் ஆண்டு தன்னுடைய முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை எசுப்பானியாவில் நடைபெற்ற Montcada செஸ் போட்டியில் பெற்றார்.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற நோய்சியல் ஓப்பன் சர்வதேச செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் இனியன் பன்னீர் செல்வம் சாம்பியன் பட்டம் வென்றார். இதைத்தொடர்ந்து தற்போது பிரான்ஸில் நடைபெற்ற மற்றொரு செஸ் தொடரான கிரேயோன் ஓப்பன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்