தமிழ் செய்திகள்  /  Sports  /  India Cricket Team Former Allrounder Ravi Shastri Celebrating His 60th Birthday Today

HBD Ravi Shastri: சப்பாத்தி ஷாட், ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள்! இது ரவிசாஸ்த்ரியின் மாயஜாலங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 27, 2023 05:26 AM IST

இந்திய அணியில் பெளலராக நுழைந்து பின்னர் ஆல்ரவுண்டராக உருவெடுத்தவர் ரவி சாஸ்த்ரி. 1983இல் இந்தியா வென்ற முதல் உலகக் கோப்பை அணியில் ஒருவராக இருந்த இவர், ஓய்வுக்கு பின்னர் வர்ணனையாளராகவும், இந்திய அணி பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர், முன்னாள் பயிற்சியாளரான ரவிசாஸ்த்ரி
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர், முன்னாள் பயிற்சியாளரான ரவிசாஸ்த்ரி

ட்ரெண்டிங் செய்திகள்

பேடிலிருந்து பிளிக் செய்யும் தனித்துவமான ஷாட் மூலம் பிரபலமானார் ரவி சாஸ்த்ரி. இவரது இந்த பேட்டிங் ஸ்டைலை சப்பாத்தி ஷாட் என்று அழைத்தார்கள். 6 அடி 3 அங்குலம் என மிக உயரமான வீரராக இருந்து வந்த ரவி சாஸ்த்ரி வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கு பேட்ஸ்மேனாக ஜொலித்தார்.

1985 சீசன் ரவி சாஸ்த்ரிக்கு பொற்காலமாக அமைந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டில் தனது ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன் என்று அழைக்கப்பட்டார். இதற்காக Audi 100 காரையும் பரிசாக பெற்றார். அதே சீசனில் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் பறக்க விட்டு சாதனை புரிந்தார்.

சொல்லப்போனால் யுவராஜ் சிங்குக்கு முன்னரே ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்த இந்தியர் என்றால் அது ரவிசாஸ்த்ரிதான். உள்ளூர் கிரிக்கெட்டில் பம்பாய் அணிக்காக விளையாடி வந்த சாஸ்த்ரி, அடிக்கடி காயத்தால் இந்திய அணிக்கு வருவதும், போவதுமாக இருந்தார்.

மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த ரவி சாஸ்த்ரி, தனது 31வது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை பெற்றார். அதன் பின்னர் வர்ணனையாளராக கம்பேக் கொடுத்த சாஸ்திரி அதிலும் தனது தனித்துவமான பேச்சால் பலரையும் ஈர்த்தார்.

இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றபோது, தோனியின் பினிஷிங் சிக்ஸரை எப்படி மறக்கமாட்டோமோ, அதேபோல் அந்த தருணத்தில் வர்ணனை செய்த ரவிசாஸ்த்ரி "Dhoni Finishes of his style" என்ற சொல்வதும் ரசிகர்கள் மனதில் நீங்காத குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

2014ஆம் ஆண்டில் இந்திய அணியின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்ட ரவிசாஸ்த்ரி, பின்னர் 2017இல் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது காலகட்டத்தில் கேப்டனாக இருந்த விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றார். அத்துடன் முதல் முறையாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்திய அணி இறுதி போட்டி வரை அழைத்து சென்றார்.

2021 டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார் ரவிசாஸ்திரி. இவரது பயிற்சி காலகட்டத்தில் இந்திய அணி பெரிய தொடர்களை வெல்லவில்லை என்றாலும், இரு நாடுகளுக்கு இடையிலான Bilateral தொடர்களை அடுத்தடுத்து வென்றன.

தற்போது லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக் கமிஷனராகவும், மீண்டும் வர்ணனையயாளராகவும் ஜொலித்து வரும் ரவிசாஸ்த்ரி இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

WhatsApp channel

டாபிக்ஸ்