Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கை! ஆசிய, உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் குவித்த வினேஷ் போகத்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கை! ஆசிய, உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் குவித்த வினேஷ் போகத்

Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கை! ஆசிய, உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் குவித்த வினேஷ் போகத்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 16, 2024 02:20 PM IST

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் 53 கிலோ பிரிவில் முதல் சீட் வீராங்கனையாக களமிறங்கிய வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக உள்ளார். இரண்டு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அவர் காமன்வெல்த், ஆசிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் என இந்தியாவுக்காக பதக்கங்கள் குவித்தவராக உள்ளார்.

ஆசிய, உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் குவித்த வினேஷ் போகத்
ஆசிய, உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் குவித்த வினேஷ் போகத் (Getty)

இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்கள்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறிய வினேஷ் போகத், மல்யுத்த வீரர்களின் உணர்ச்சிகரமான போராட்டத்தில் முன்னணியில் இருந்தார்.

மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவராக இருக்கும் போகத், மூன்று காமன்வெல்த் விளையாட்டு தங்கப் பதக்கங்கள், இரண்டு உலக சாம்பியன்ஷிப் வெண்கலம் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் ஆகியவற்று என இந்தியாவுக்காக பதக்கங்களை குவித்தவராக உள்ளார்.

மல்யுத்த விளையாட்டு குடும்ப பின்னணி

இந்தியாவின் புகழ்பெற்ற போகத் மல்யுத்த குடும்பத்திலிருந்து வந்தவர் தான் வினேஷ் போகத். தனது உறவினர்களான கீதா போகத் மற்றும் பபிதா குமாரி ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மல்யுத்து விளையாட்டில் தனக்கென தனித்த இடத்தையும் பிடித்துள்ளார்.

மல்யுத்த விளையாட்டை இவருக்கு அறிமுகப்படுத்தியது, இவரது மாமாவும் முன்னாள் மல்யுத்த வீரருமான மகாவீர் சிங் போகத். மல்யுத்தத்த விளையாட்டானது ஆண்களுக்கான விளையாட்டு என கருதிய காலட்டத்தில் பல்வேறு எதிர்ப்பையும் மீறி வினேஷ் போகத்தை களமிறங்கிய மகாவீர் சிங் போகத் வெற்றியும் கண்டார்.

வினேஷ் ஒன்பது வயதாக இருந்தபோது தனது தந்தையின் அகால மரணத்தையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், வினேஷ் மல்யுத்த விளையாட்டில் சிறந்த வழிகாட்டுதல்களுடன் வெற்றி நடை கண்டார்.

முதல் சர்வதேச பதக்கம்

2014இல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 48 கிலோ பிரிவில் தனது முதல் பெரிய சர்வதேச பட்டத்தை வென்றார் வினேஷ் போகத். இஸ்தான்புல்லில் நடந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் வென்ற பின்னர் 2016 ரியோ ஒலிப்பிக்கில் தனது ஒலிம்பிக் விளையாட்டின் பயணத்தை தொடங்கினார்.

காலிறுதியில் முழங்கால் காயம் ஏற்பட்டதால் அவரது கனவுகள் சிதைந்தன. இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க கனவும் பறிபோனது.

இதைத்தொடர்ந்து 2018 காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களுடன் மீண்டு வந்த அவர், 2019இல் 53 கிலோ பிரிவுக்கு மாறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற அவர், நூர்-சுல்தானில் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தைப் பெற்றார். இதன்மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்கு தகுதி பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்குச் செல்லும் முன் உச்சகட்ட பார்மில் இருந்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக் போட்டிக்கு முன்னர் ஓர் ஆண்டாக எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாமல் இருந்தார்.

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 53 கிலோ பிரிவில் முதல் சீட் வீராங்கனையாக களமிறங்கியபோதிலும், அதிக சவால்களை எதிர்கொண்டார். அவர் ஆரம்ப போட்டிகளைத் தாண்டி முன்னேறவில்லை.

டோக்கியோ 2020 க்குப் பிறகு முழங்கை அறுவை சிகிச்சை செய்து கொண்ட வினேஷ், 2021 ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். 2022இல் பெல்கிரேடில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும், பிரிமிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கமும் வென்றார்.

வினேஷ் வென்ற பதக்கங்கள்

உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை வெண்கலம் வென்றுள்ளார் வினேஷ் போகத். ஆசிய விளையாட்டில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம், காமன்வெல்த் விளையாட்டில் மூன்று தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஒரு தங்கம், மூன்று வெள்ளி, நான்கு வெண்கலம், யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி ஆகியவை வினேஷ் போகத் வென்ற பதக்கங்களாகும். இதுவரை மொத்தம் 15 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.