Ind vs Aus 2nd Odi: வருகிறார் ரோஹித்! மழை வாய்ப்புக்கு இடையே சாதிக்குமா இந்தியா?
Ind vs Aus 2nd Odi: இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பும் நிலையில், இஷான் கிஷன் அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகியோரில் ஒருவர் கழட்டிவடப்படுவார்கள் என தெரிகிறது. அதேபோல் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறக்கபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ட்ரெண்டிங் செய்திகள்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் விதமாக ஆடுகளம் அமைந்திருந்தது. இரு அணிகளிலும் பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை ரன்குவிப்பில் ஈடுபடவிடாமல் திணறடித்தனர். ஆனால் கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோரின் நிதான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகபட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் சொந்த காரணங்களால் விளையாடாத கேப்டன் ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்புகிறார். இதனால் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட இஷான் கிஷன் நீக்கப்படுவார் என தெரிகிறது.
அத்துடன் இஷான் கிஷன் இடது கை பேட்ஸ்மேன் என்பதால், அவரது முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக களமிறங்கி எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாத சூர்யகுமார் யாதவ் நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
அதேபோல் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக ஷமி, சிராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஹர்திக் பாண்ட்யா இருப்பதால், ஸ்பின் பெளிலங்கை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.
இன்றைய போட்டியில் தோல்வியை தழுவினால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் ஆஸ்திரேலியா அணி சரியான காம்பினேஷனில் அணியை உருாக்கி வெற்றிக்காக உறுதியுடன் போராடும் என நம்பப்படுகிறது.
அந்த அணியிலும் காயத்திலிருந்து அணிக்கு திரும்பிய மிட்செல் மார்ஷ் முதல் போட்டியில் 81 ரன்களை குவித்து அணியின் டாப் ஸ்கோரராக இருப்பதுடன் தனது பார்மையும் நிருபித்தார். இவரை போல் காயத்திலிருந்து அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் பேட்டிங், பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே அவர் தன்னை நிருபிக்க போராடுவார் என நம்பலாம்.
பிட்ச் எப்படி?
அதிக ரன்கள் குவிக்கும் விதமாக பேட்ஸ்மேன்களின் சொர்ககபுரியாக இருந்து வரும் விசாகபட்டினம் ஓய்எஸ்ஆர் மைதானத்தில் இந்தியா விளையாடியிருக்கும் 9 போட்டிகளில் 7இல் வெற்றி பெற்றுள்ளது.
இந்த மைதானத்தில் விளையாடி ஆறு போட்டிகளில் கோலி மூன்று சதமும், இரண்டு அரைசதமும் அடித்துள்ளார்.
மழை வாய்ப்பு?
விசாகபட்டினத்தில் மதிய நேரத்தில் லேசான சாரல் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. எனவே மழை குறுக்கீடுக்கான வாய்ப்புகள் இருக்கலாம்.
சாதனை துளிகள்
இன்னும் 55 ரன்கள் எடுத்தால் கேஎல் ராகுல் குறைந்த போட்டியில் 2 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்தியா என்ற பெருமையை பெறுவார்.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித்துக்கு 61 ரன்கள் தேவையாக உள்ளது.
போட்டி தொடங்கு நேரம்
இந்த போட்டி இந்திய நேரப்படி 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும், டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் போட்டியை கண்டு ரசிக்கலாம்.