'கில்லிடா நான்' - பொறுப்பாக பேட் செய்து வெற்றி தேடி தந்த கேஎல் ராகுல்
Ind vs Aus 1st Odi: இந்தியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய போதிலும் நிதானமாக பேட் செய்து அரைசதத்தை பூர்த்தி செய்த கேஎல் ராகுல் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பெளலிங்கை தேர்வு செய்த இந்திய அணி அசத்தலாக பெளலிங் செய்த ஆஸ்திரேலியா அணியை 188 ரன்களில் ஆல்அவுட் செய்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
குறைவான டார்கெட் என்றாலும் இந்தியாவுக்கு மேசாமான தொடக்கம் அமைந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷன் 3, சுப்மன் கில் 20, கோலி 4, சூர்யகுமார் யாதவ் 0 என பேட்டிங்கில் ஏமாற்றினர். இதனால் 39 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் ஆகியோர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தகர்த்தனர்.
பின்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேஎல் ராகுல் - கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணியில் சரிவிலிருந்து மீட்டனர். பாண்ட்யா 25 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 83 என இருந்தது.
மறுமுனையில் நிதானமாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்ட வந்த கேஎல் ராகுலுடன், கைகோர்த்தார் ஆல்ரவுண்டர் ஜடேஜா. இருவரும் இணைந்து விக்கெட் சரிவை தடுத்ததோடு பொறுமையாக இலக்கை நோக்கி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
அரைசதம் விளாசிய கேஎல் ராகுல் பின்னர் பவுண்டரிகள் மூலம் ரன் குவிப்பில் ஈடுபட்டார். இறுதியில் 39.5 ஓவரில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கேஎல் ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 75 ரன்களும், ஜடேஜா அவுட்டாகமல் 45 ரன்களும் எடுத்துள்ளனர்.
பந்து வீச்சில் 2 விக்கெட்டுகள், பேட்டிங்கில் முக்கிய கட்டத்தில் களமிறங்கி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் சொதப்பிய கேஎல் ராகுல் இரண்டு போட்டிகளில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அத்துடன் அவருக்கு வழங்கப்பட்ட துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது.
ஆனால் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் நல்ல பார்மில் இருந்து வரும் கேஎல் ராகுல் அதை இன்றைய போட்டியில் தொடர்ந்து, வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தான் ஒரு கில்லி என்பதை நிருபித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி மார்ச் 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.