ICC Odi Team 2022: கோலி, ரோஹித் கிடையாது! இரண்டு இந்தியர்களுக்கு அணியில் இடம்
கடந்த ஆண்டுக்கான ஐசிசி சிறந்த ஒருநாள் அணியில், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி என இருவரும் இடம்பெறவில்லை. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இரண்டு இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் சிறந்த டி20 அணியை இரு நாள்களுக்கு முன் ஐசிசி வெளியிட்டது. இதில் ஆடவர் அணியில் 3, பெண்கள் அணியில் 4 என மொத்தம் 7 இந்தியர்கள் இடம்பிடித்திருந்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதைத்தொடர்ந்து சிறந்த டெஸ்ட் அணி வெளியிடப்பட்டது. இதில் ஒரேயொரு இந்திய வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மட்டுமே இடம்பிடித்தார்.
டி20, டெஸ்ட் அணிகளுக்கு அடுத்தபடியாக தற்போது 2022ஆம் ஆண்டின் சிறந்த ஒரு நாள் அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெறவில்லை.
ஆனால் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர், பெளலரான முகமது சிராஜ் ஆகியோர் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். ஒரு நாள் போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், 17 போட்டிகளில் 724 ரன்கள் எடுத்து 55.69 சராசரி வைத்துள்ளார். ஒரு சதம் உள்பட 6 அரைசதங்கள் விளாசியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், 91.52 ஸ்டிரைக் ரேட் கொண்டுள்ளார்.
தனது ஆங்கர் இன்னிங்ஸ் மூலம் தொடர்ச்சியாக சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ஷ்ரேயாஸ் ஐயர், உலகக் கோப்பை ஒரு நாள் தொடருக்கான உத்தேச அணியின் தனக்கான இடத்தை உறுதிபடுத்தியுள்ளார்.
ஜஸ்பிரீத் பும்ரா காயத்தால் விலகிய நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சின் வலிமைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு தொடர்ந்து நிலையான பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார் சிராஜ். கடந்த ஆண்டில் 15 போட்டிகளில் பங்கேற்ற சிராஜ், 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது எகானமி 4.62 என சிக்கனமாகவே உள்ளது.
எனவே இவரும் உலகக் கோப்பை தொடருக்கான பந்து வீச்சாளர்களில் பிரதான பட்டியலில் இணைந்துள்ளார்.
ஐசிசி சிறந்த ஒரு நாள் அணிக்கு கேப்டனாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக நியூசிலாந்து வீரர் டாம் லதாம் உள்ளார். இந்த அணியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளிலிருந்து தலா 2 பேரும், பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளில் இருந்து தலா ஒருவரும் தேர்வாகியுள்ளனர்.
ஐசிசி சிறந்த ஒரு நாள் அணி 2022:
பாபர் அசாம் (கேப்டன்) - பாகிஸ்தான்
டிரேவிஸ் ஹெட் - ஆஸ்திரேலியா
ஷாய் ஹோப் - வெஸ்ட் இண்டீஸ்
ஷ்ரேயாஸ் ஐயர் - இந்தியா
டாம் லதாம் (விக்கெட் கீப்பர் - நியூசிலாந்து
ஷிகந்தர் ராசா - ஜிம்பாப்வே
மெஹ்டி ஹசான் மிராஸ் - வங்கதேசம்
அல்சாரி ஜோசப் - வெஸ்ட் இண்டீஸ்
முகமது சிராஜ் - இந்தியா
டிரெண்ட் போல்ட் - நியூசிலாந்து
ஆடம் ஸாம்பா - ஆஸ்திரேலியா