ICC World Test Championship Prize Money: Winner மட்டுமல்ல, மற்ற அணிகளும் பெறபோகும் பரிசுத்தொகை - ஐசிசி வெளியிட்ட தகவல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி முதல் கடைசி இடத்தை பிடிக்கும் அணி வரை பெறப்போகும் பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த வகையில் வெற்றியாளர், ரன்னர் அப் அணியை தவிர மற்ற அணிகள் பெறப்போகும் பரிசு தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கடந்த இரண்டு மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் திருவிழா விருந்தாக அமைந்திருந்தது. தற்போது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இன்னும் குவாலிபயர் 2 மற்றும் இறுதி போட்டி மட்டுமே பாக்கியுள்ளது.
அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடும்.
ஐபிஎல் தொடர் முடிவுற்ற பின் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இங்கிலாந்திலுள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெறுகிறது. ஜூன் 12 ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணி, இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்காக வழங்கப்படும் பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அத்துடன் டாப் 9 இடங்களை பிடித்த அணிகளுக்கும் எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ. 13 கோடி, இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 6.5 கோடி பரிசாக வழங்கப்படவுள்ளது.
இதைத்தொடர்ந்து முறையே 3 முதல் 5 இடத்தில் உள்ள தென்ஆப்பரிக்கா, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கு முறையே ரூ. 3.5 கோடி, ரூ. 2.8 கோடி, ரூ. 1.6 பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
இதன்பின்னர் 6,7,8,9 இடங்களில் இருக்கும் நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு தலா ரூ. 85 லட்சம் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பயிற்சியை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர், பயிற்சியாளர் சோகம் தேசாய் உள்ளிட்டோரும் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர்.
ஐபிஎல் தொடர் முடிவுக்கு பின்னர் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இங்கிலாந்துக்கு செல்லவுள்ளனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சத்தேஷ்வர் புஜாரா கடந்த சில வாரங்களாகவே இங்கிலாந்தில் கவுண்டி அணியில் விளையாடி வருகிறார்.
கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இந்த முறை வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9