சுழற்பந்து வீச்சில் கிரிக்கெட்டை கட்டியாண்ட முத்தையா முரளிதரன் பிறந்த தினம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  சுழற்பந்து வீச்சில் கிரிக்கெட்டை கட்டியாண்ட முத்தையா முரளிதரன் பிறந்த தினம்

சுழற்பந்து வீச்சில் கிரிக்கெட்டை கட்டியாண்ட முத்தையா முரளிதரன் பிறந்த தினம்

Priyadarshini R HT Tamil
Apr 17, 2023 06:10 AM IST

Happy Birthday Muttiah Muralitharan : இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பிறந்த தினம் இன்று. அவரது சாதனை வரலாற்றை சற்று திரும்பி பார்போம்.

இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்
இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்

தனது 20-வது வயதில், 1992ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கவனம் பெற்றார். அடுத்தாண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்தபோது, அந்நாட்டு வீரர்கள் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அவர் பந்துவீசும் முறை சரியல்ல எனக் குற்றம்சாட்டினர். எனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. முத்தையா முரளிதரனின் பந்துவீச்சை சோதனைக்கு உட்படுத்தினர். அதில் அவரது பந்துவீச்சு முறை கிரிக்கெட் விதிகளுக்கு முரணானது அல்ல என சான்றளித்தனர். 

ஆனால் அதற்கு பிறகும், ஆஸ்திரேலியா நடுவர்களால் மீண்டும் அதே குற்றச்சாட்டுக்கு ஆளானார். அதிலும் ஐசிசி நடத்திய விசாரணையில், முரளிதரனின் பந்துவீச்சு முறையில் குறையில்லை என தெரியவந்தது. மேலும் பந்து வீசும்போது முத்தையா முரளிதரனின் அசாதாரண கை அசைவுகளை அனுமதிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது விதிகளில் மாற்றம் செய்தது. முத்தையா முரளிதரனின் புதிய வகை பந்து வீச்சு “தூஸ்ரா” என பெயர் பெற்றது. தனக்கு எதிராக எழுந்த சர்ச்சைகளால் துவண்டு விடாத முத்தையா முரளிதரன், தொடர் முயற்சிகளின் காரணமாக கிரிக்கெட் உலகில் பிரகாசித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக முறை 5 விக்கெட்டுகளை எடுத்தவர் (67), ஒரு போட்டியில் அதிக முறை 10 விக்கெட்டுகளை எடுத்தவர் (22), டெஸ்ட் போட்டிகள் விளையாடிய ஒவ்வொரு நாட்டு அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரர், ஒரு டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 4 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என ஏராளமான சாதனைகளைப் புரிந்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 19 ஆட்ட நாயகன் விருதுகளையும், ஒருநாள் போட்டிகளில் 14 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்றார். டெஸ்ட் தொடர்களில் 11 முறை தொடர் நாயகன் விருது பெற்றார். 

2007ம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 700வது விக்கெட்டைக் கைப்பற்றிய 2வது பந்து வீச்சாளராக திகழ்ந்தார். 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை புரிந்தார். 2010ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 800வது டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார். இது கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாக விளங்கியது. இவற்றின் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் இவரை, “பௌலிங்கின் டான் பிராட்மென்” என வர்ணித்தார். அதற்கு அடுத்த ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 

“கிரிக்கெட்டின் பைபிள்” என வர்ணிக்கப்படும் இங்கிலாந்தின் விஸ்டன் இதழ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி 1971 முதல் 2021 ஆண்டு வரை ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரர்களை தேர்வு செய்து கவுரவித்தது. அவர்களில் முத்தையா முரளிதரனும் ஒருவராக திகழ்ந்தார். 

இலங்கையிலுள்ள மலையகத்தில் பிறந்து, சர்வதேச அளவில் கிரிக்கெட் உலகில் உச்சிக்கொடியை நிலைநாட்டிய தமிழரான முத்தையா முரளிதரனை கவுரப்படுத்தும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. இதற்கான முன்னெடுப்புகள் தமிழ்நாட்டில், கோலிவுட் திரையுலகினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளான இன்று அவர் வாழ்வில் எல்லா நலன்களும், வளுமும் பெற்ற வாழ ஹெச்.டி. தமிழ் வாழ்த்துகிறது.  

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.