வரலாறு படைத்த குகேஷ்.. களத்தில் சிந்திய ஆனந்த கண்ணீர்! 18வது உலக சாம்பியன்ஷிப்பில் 18 வயதில் சாம்பியன் ஆகி சாதனை
தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது கிராண்ட் மாஸ்டரான குகேஷ், 18வது உலக சாம்பியன்ஷிப்பில் சாம்பியனாகி சாதனை புரிந்துள்ளது. சீனாவை சேர்ந்த டிங் லிரன் வீழ்த்தி அவர் இந்த வரலாறு படைத்தார்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக 18வது செஸ் சாம்பியன்ஷிப்பில் 14வது ஆட்டத்தில் லிரன் செய்த தவறு மூலம் ஆட்டத்தை தனக்கு சாதகமாக்கி கொண்ட குகேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்தார். இதன் மூலம் குகேஷ் தனது 18 வயதில் 18வது உலக சாம்பியனானார்,
செஸ் விளையாட்டில் மிகவும் இளம் வயதில் உலக சாம்பியன் ஆகியிருக்கும் கேரி காஸ்பரோவை விட நான்கு வயது இளையவராக குகேஷ் இருக்கிறார். 1985 ஆம் ஆண்டில் அனடோலி கார்போவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 22 வயது காஸ்ப்ரோ இளைய உலக சாம்பியனாக மாறினார். இப்போது அவரது சாதனையை 39 ஆண்டுகள் கழித்து முறியடித்து புதிய வரலாற்றை எழுதியுள்ளார் குகேஷ்.
குகேஷ் கொடுத்த அழுத்தம்
தனது லாவகமாக மூவ்மெண்ட்களால் லிரனுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்த குகேஷ், அவரை திக்குமுக்காட வைத்தார். சாம்பியனை தீர்மானிக்கும் இந்த போட்டியில் குகேஷ் கறுப்புக் காய்களுடன் வெற்றியைப் பெற்றார். டை-பிரேக்கரை கட்டாயப்படுத்த லிரன் வசதியான நிலையில் இருந்தாலும், இறுதியில் 6.5-7.5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
ஆனந்த கண்ணீர்
இந்த சாதனை வெற்றிக்கு பின்னர் உட்கார்ந்தவாறே தனது மகழிச்சியை வெளிப்படுத்தியதோடு, ஆனந்த கண்ணீர் வடித்த குகேஷ், “கடந்த 10 ஆண்டுகளாக இந்த தருணத்தை எதிர்பார்த்து கனவுடன் காத்திருந்தேன். எனது கனவை நனவாக்கியதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்காததால் சற்று உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால் பின்னர் நான் அழுத்திச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது.” என்றார்.
டி குகேஷ் vs டிங் லிரன் போட்டியின் ஹைலைட்டுகள்
2023ல் ரஷ்ய வீரரான இயன் நெபோம்னியாச்சியை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றிய பிறகு டிங், தனது ஃபார்மில் இருந்து சரிந்தார். கடந்த ஜனவரி முதல் கிளாசிக்கல் விளையாட்டில் வெற்றியை பதிவு செய்யாமலும், தனது ஆட்டத்தை மேம்படுத்தும் முயற்சியில் தவிர்த்தும் வந்துள்ளார்.
ஆனால் உலக சாம்பியன்ஷிப்பில் தொடக்கச் சுற்றில் ஆச்சரியமான வெற்றிக்குப் பிறகு தனது தன்னம்பிக்கையை மீட்டார் டிக்.
குகேஷுக்கு இரண்டு வெற்றிகள் மற்றும் எட்டு டிராக்களைத் தொடர்ந்து, 12வது சுற்றில் தனது ஸ்கோரை சமன் செய்தார்.
2.5 மில்லியன் டாலர் பரிசுத் தொகையுடன் 14 சுற்றுகள் கொண்ட நீண்ட கால கிளாசிக்கல் நிகழ்வாக இந்தப் போட்டி இருந்தது. கடந்த ஏப்ரலில் நடந்த கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்று குகேஷ் தகுதி பெற்றிருந்தார்.
2013 முதல் உலக சாம்பியனாக இருந்த உலகின் நம்பர் ஒன் மேக்னஸ் கார்ல்சன், போதிய ஊக்கமின்மை காரணமாக 2022இல் தனது பட்டத்தை கைவிட்டார்.
வரலாறு படைத்த குகேஷ்
இந்த வெற்றியின் மூலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற குகேஷ், இளைய உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ளார். 1985இல் அனடோலி கார்போவை வீழ்த்தி 22 வயதில் பட்டத்தை வென்ற கேரி காஸ்பரோவ் இந்த சாதனையை முன்பு வைத்திருந்தார்.
ஐந்து முறை உலக சாம்பியனான புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்த்க்குப் பிறகு உலகளாவிய பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் கடைசியாக 2013இல் பட்டம் வென்றார்.
“2013இல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் சாரை பார்த்தபோது, இதேபோன்ற கண்ணாடி அறையில் நானும் செஸ் ஆட்டத்தை விளையாடினால் சூப்பர் கூலாக இருக்கும் என்று நினைத்தேன். உண்மையில் அங்கு உட்கார்ந்து என் பக்கத்தில் இந்தியக் கொடியைப் பார்ப்பது. சிறந்த தருணமாக இருக்கும்.
மேக்னஸ் வென்றபோது, இந்தியாவுக்கு மீண்டும் பட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நான் நினைத்தேன். வரலாற்றில் இளைய உலக சாம்பியனாக வேண்டும் என்று நான் 2017இல் கூறியிருந்தேன்" என்று குகேஷ் கூறினார்.
டாபிக்ஸ்