Swiss Open 2025: தொடரும் இந்தியர்களின் ஆதிக்கம்.. மகளிர் இரட்டையர் பிரிவில் அடுத்த சுற்றில் காயத்ரி, ட்ரீசா ஜோடி
சுவிட்சர்லாந்தின் பாசலில் நடைபெற்று வரும் சுவிஸ் ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் மகளிர் இரட்டையர் ஜோடியான காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி முன்னேறினர்.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி மற்றும் சங்கர் முத்துசாமி ஆகியோர் பிரதான் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி
உலகின் 9-வது இடத்தில் உள்ள இந்திய ஜோடியான, காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி, சுவிட்சர்லாந்தின் அலைன் முல்லர் மற்றும் நெதர்லாந்தின் கெல்லி வான் பியூட்டன் ஜோடியை 21-16, 21-17 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தியது. தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்த ஜோடி அடுத்த போட்டியில் ஜெர்மனியின் செலின் ஹப்ஸ்ச் மற்றும் அமெலி லெஹ்மானை எதிர்கொள்ள உள்ளார்கள்.
இந்தியாவின் மகளிர் இரட்டையர் பிரிவில் பிரியா கோன்ஜெங்பாம்-ஸ்ருதி மிஸ்ரா மற்றும் வர்ஷினி விஸ்வநாத் ஸ்ரீ-ஆரத்தி சாரா சுனில் ஆகியோர் தங்களது தொடக்க சுற்றில் தோல்வியடைந்தனர். எனவே இந்த பிரிவில் நான்காம் சீட் வீராங்கனைகளான காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.