Sumeeth Reddy: காமன்வெல்த் பதக்கம் வெற்றியாளர்.. பேட்மிண்ட்ன் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பி சுமீத் ரெட்டி
மனு அட்ரியுடன் ஆண்கள் இரட்டையர் ஜோடியை உருவாக்கிய ஹைதராபாத் வீரரான சுமீத் ரெட்டி, அவரது மனைவி என் சிக்கி ரெட்டி உட்பட பல ஷட்லர்களுடன் கலப்பு இரட்டையர் போட்டிகளிலும் விளையாடினார்.

இந்திய பேட்மிண்டன் விளையாட்டில் இரட்டையர் பிரிவு போட்டியில் பல பதக்கங்களை வென்ற வீரராக திகழ்ந்த பி. சுமீத் ரெட்டி ஓய்வை அறிவித்துள்ளார். இந்தியன் டபுள்ஸ் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படும் இவர் 2022 காமன்வெல்த் போட்டிகளில் கலவை இரட்டையர் பிரிவு போட்டியில் வெள்ளி வென்றார்.
இதையடுத்து 33 வயதாகும் சுமீத் ரெட்டி, ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், பேட்மிண்டன் பயிற்சியாளராக முழு கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த சுமீத் ரெட்டி, மனு அட்ரி உடன் இணைந்து ஆண்கள் இரட்டையர் பிரிவு ஜோடியாக இந்தியாவுக்காக பல போட்டிகளில் களமிறங்கியுள்ளார். அதேபோல் கலவை இரட்டையர் பிரிவு போட்டியில் பல்வேறு வீரர், வீராங்கனைகளுடன் விளையாடியுள்ளார். இவரது மனைவியும், பேட்மிண்டன் வீராங்கனையுமான சிக்கி ரெட்டியுடன் இணைந்து பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சுமீத் ரெட்டி சாதனைகள்
இந்திய இரட்டையர்கள் வெற்றிகரமான இரட்டைர்களாக வலம் வந்த சுமீத் மற்றும் மனு அட்ரி ஜோடி உலக அளவில் 17வது ரேங்கிங்கை பெற்றுள்ளனர். 2016ஆம் ஆண்டில் தெற்கு ஆசியா விளையாட்டில் தங்க பதக்கம் வென்றுள்ளனர். அதேபோல் ரியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற இந்த ஜோடி, ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆசிய ஆண்கள் சாம்பியன்ஷிப்பில் விளையாடியுள்ளனர்.