FIFA world cup 2022: முதல் ‘ரெட் கார்டு’ வாங்கிய வேல்ஸ்… வென்றது ஈரான்!
இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது ஈரான்.

உலக ரசிகர்களின் உள்ளத்தில் குடியிருந்து வரும் கால்பந்து ஆட்டத்தின் உலகக்கோப்பை தொடரான பிபா 2022 போட்டிகள், கத்தாரில் தொடங்கி நடந்து வருகிறது.
குழு வாரியாக நடந்து வரும் இப்போட்டியில், ‘பி’ குழுவில் உள்ள வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகள் நேருக்கு நேர் மோதின. கத்தாரின் அல் ரையான் நகரிலுள்ள அஹ்மத் பின் அலி அரங்கில் நடந்த இப்போட்டியை காண, பல்லாயிரக்கணக்கானோர் மைதானத்தில் கூடியிருந்தனர்.
இரு அணியின் ரசிகர்களின் ஆரவாரத்தில் போட்டி தொடங்கிய நொடியில் இருந்து பரபரப்பான சூழல் நிலவியது. பரபரப்பாக நகர்ந்த ஆட்டத்தில், இடைவேளை வரை எந்த ஒரு அணியும் கோல் அடிக்கவில்லை.
போட்டியின் 86வது நிமிடத்தில், வேல்ஸ் அணியின் வெய்ன் ஹென்னஸி, ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக, நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த பிபா 2022 உலகக்கோப்பை போட்டியில், ரெட் கார்டு பெற்ற முதல் வீரர் என்ற ‘பெருமையை’ பெற்றார் வெய்ன் ஹென்னஸி . அவரது வெளியேற்றத்தை தொடர்ந்து 10 பேரும் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது வேல்ஸ் அணி.
டெனி வர்ரட், வேல்ஸ் அணியில் புதிய கோல் கீப்பராக பொறுப்பேற்றுக் கொண்டார். கூடுதல் நேரத்தின் 8 வது நிமிடத்தில் ஈரான் தனது முதல் கோலை அடித்து, ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது.
ஈரான் அணியின் ரூபே செஸ்மி, அந்த கோலை அடித்திருந்தார். அடத்த 3 நிமிடங்கள் கடந்த நிலையில், ஈரான் மற்றொரு கோல் அடித்தது. இதைத் தொடர்ந்து ஈரான் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்த கோல், ஈரான் அணியின் ரமின் ரெஸாயன் சார்பில் அடிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஈரான் அடித்த இரண்டு கோல்களால், வேல்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது ஈரான். முதலிடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

டாபிக்ஸ்