Euro 2024: ஜார்ஜியாவிடம் பலத்த அடி வாங்கிய போர்ச்சுகல்! மோசமான சாதனை புரிந்த கிறிஸ்டியானா ரொனால்டோ
ஜார்ஜியாவிடம் பலத்த அடி வாங்கிய போர்ச்சுகல் அணி ஒரு கோல் கூட அடிக்காமல் தோல்வியை தழுவியுள்ளது. அத்துடன் முதல் முறையாக சர்வதேச தொடரில் மோசமான சாதனை புரிந்தார் கிறிஸ்டியானா ரொனால்டோ

யூரோ 2024 கோப்பை தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த முறை மொத்தம் 24 அணிகள் இடம்பிடித்துள்ளது. புதிய அணியாக ஜார்ஜியா களமிறங்கியுள்ளது. மொத்தம் 6 குரூப்கள், ஒவ்வொரு குரூப்களிலும் 4 அணிகள் லீக் சுற்றுகளில் மோதி வருகின்றன.
போர்ச்சுகலை வீழ்த்திய ஜர்ஜியா
குரூப் எஃப் பிரிவில் இடம்பிடித்திருக்கும் போர்ச்சுகல் - ஜார்ஜியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் ஜார்ஜியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முழுவதும் 73 சதவீதம் வரை பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிலும் போர்ச்சுகல் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் க்விச்சா க்வரத்ஸ்கேலியா என்பவரும், பின்னர் 57வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஜார்ஜஸ் மிகாவுடாட்ஜே என்பவரும் ஜார்ஜியா அணிக்காக கோல்கள் அடித்தனர். யூரோ கோப்பை தொடரில் ஜார்ஜியா பெற்ற முதல் வெற்றியாக இந்த போட்டி அமைந்துள்ளது.