Dutee Chand: தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருக்கும் டூட்டி சந்த்
டூட்டி சந்த் சிறந்த தடகள வீராங்கனை மட்டுமில்லாமல், அவர் குற்றமற்றவர், அவர் மீதான தடை தற்செயலானது எனவும் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்து தடையை நீக்க முயற்சிப்போம் என வழக்கறிஞர் பார்த் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான 27 வயதாகும் டூட்டி சந்த், 100மீ ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 5 மற்றும் 26ஆம் தேதி அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது.
அதாவது டூட்டி சந்தின் உடலில் தடை செய்யப்பட்ட அனபோலிக் ஏஜெண்டுகளான ஆண்டரைன், ஆஸ்டரைன் மற்றும் லிகண்ட்ரோல் இரண்டு சோதனையின் போது இருந்தது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து டூட்டி சந்துக்கு கடந்த ஜனவரி மாதம் இடைக்கால தடை விதித்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டது. ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் டூட்டி சந்த்துக்கு 4 ஆண்டுகள் தடை போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து ஊக்கமருந்து எதிர்ப்பு ஒழுங்குமுறை குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை காலம் இந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. இந்த தடைக்கு பின், மாதிரி சேகரிப்பு தேதியில் இருந்து அவர் பெற்ற பரிசுகள் மற்றும் விருதுகள் அனைத்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மாதிரி சேகரிக்கப்பட்ட டிசம்பர் 5, 2022 நாளிலிருந்து டூட்டி சந்த் பெற்ற அனைத்து போட்டி முடிவுகளும் தகுதி நீக்கம் செய்யப்படும். பதக்கங்கள், புள்ளிகள் மற்றும் பரிசுகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யபடும்.
டூட்டி சந்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர் பார்த் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: "டூட்டி சந்த் தடகள விளையாட்டில் சிறந்த வீரர் மட்டுமல்ல, குற்றமற்றவராகவும் உள்ளார். அவர் மீதான தடை தற்செயலானது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்து தடையை நீக்க முயற்சிப்போம்.
டூட்டி சந்த் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் நூற்றுக்கணக்கான ஊக்கமருந்து சோதனைகளுக்கு உட்பட்டுள்ளார்" என்று கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்