உலக பேட்மிண்டன் தரவரிசை.. சிந்து, லக்ஷயா சென் சரிவு.. டாப் 10 இடத்தில் இருக்கும் இந்தியர்கள் யார்?
கடந்த வாரம் சீனாவின் நிங்போவில் நடந்த பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப்பை தவறவிட்ட த்ரீசா மற்றும் காயத்ரி, ஒரு இடம் கீழே இறங்கி 10வது இடத்துக்கு சரிந்தனர். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய ஸ்டார் வீரர்கான லக்ஷயா சென், பி.வி. சிந்து ஆகியோரும் சரிவை சந்தித்துள்ளனர்.

உலக பேட்மிண்டன் தரவரிசை பிடபிள்யூஎஃப் எனப்படும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் டாப் 10 இடத்தில் பெண்கள் இரட்டையர் பிரிவித் த்ரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மற்ற ஸ்டார் வீரர்கள் யாரும் இந்த லிஸ்டில் இல்லை.
டாப் 10 இடத்தில் இந்திய ஜோடி
பெண்கள் இரட்டையர் ஜோடியான த்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் முதல் 10 இடங்களுக்குள் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டனர். ஒற்றைய் பிரிவு நட்சத்திரங்களான பி.வி. சிந்து மற்றும் க்ஷயா சென் ஆகியோர் சரிவை சந்தித்துள்ளனர்.
கடந்த வாரம் சீனாவின் நிங்போவில் நடந்த பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப்பைத் தவறவிட்ட த்ரீசா மற்றும் காயத்ரி, ஒரு இடத்தை இழந்து 10வது இடத்துக்கு சரிந்தனர். ஒலிம்பியன்களான தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஜோடி 22வது இடத்தில் நீடித்துள்ளது.
பி.வி. சிந்து சரிவு
பெண்கள் ஒற்றையர் பிரிவில், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் முன்னாள் உலக சாம்பியனுமான சிந்து, சீனாவில் 16வது சுற்றில் இருந்து வெளியேறிய பிறகு 17வது இடத்திலிருந்து 18வது இடத்துக்கு சரிந்தார். மாளவிகா பன்சோத் (22வது இடம்), ரக்ஷிதா ஸ்ரீ (42வது இடம்), அனுபமா உபாத்யாயா (44வது இ5டம்) மற்றும் ஆகர்ஷி காஷ்யப் (49வது இடம்) ஆகியோர் முதல் 50 இடங்களில் உள்ள மற்ற இந்தியர்களாக உள்ளார்கள்.
ஆண்கள் தரவரிசை நிலவரம்
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், பாரிஸ் ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்த லக்ஷயா சென், சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு 16வது இடத்திலிருந்து 18வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தனது தொடக்கப் போட்டியில் தோல்வியடைந்த எச்.எஸ். பிரணாய், 29வது இடத்திலிருந்து 30வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கிரண் ஜார்ஜ் (35வது இடம்) மற்றும் பிரியான்ஷு ராஜாவத் (36வது இடம்) முறையே அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர்.
ட்ரீசா - காயத்ரியைப் போலவே, ஆண்கள் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோரும் சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்கவில்லை. இந்த ஜோடி ஒரு இடத்தை இழந்து 11வது இடத்தில் உள்ளது.
சீனா தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய ஒரே இந்தியர்களான தனிஷா மற்றும் துருவ் கபிலாவின் கலப்பு இரட்டையர் ஜோடி ஒரு இடம் முன்னேறி 17வது இடத்துக்கு முன்னேறியது.
உலக தரவரிசையின் அடிப்படையில் மதிப்புமிக்க கலப்பு அணி சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற இந்தியா, முன்னாள் சாம்பியனான இந்தோனேசியா, இரண்டு முறை இரண்டாம் இடத்தைப் பிடித்த டென்மார்க் மற்றும் வலுவான இங்கிலாந்து அணியுடன் சவால் மிக்க குரூப் டி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 27 முதல் மே 4 வரை சீனாவின் ஜியாமெனில் நடைபெறும் சுதிர்மன் கோப்பை இறுதிப் போட்டியில், இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து மற்றும் உலகின் 18வது இடத்தில் உள்ள லக்ஷயா சென் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்குவார்கள் என்று தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
14 பேர் கொண்ட இந்திய அணியில், காயம் இருந்து மீண்டுள்ள ஆண்கள் இரட்டையர் பிரிவு ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி மீண்டும் களமிறங்குகிறது. இந்திய அளவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெண்கள் இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த் மற்றும் த்ரீசா ஜாலி ஜோடி காயம் தொடர்பான பிரச்னைகள் காரணமாக இந்த போட்டியை இழக்கிறார்கள்.

டாபிக்ஸ்