Asian Table Tennis Championships: சீனா தைபேவுக்கு எதிராக படுதோல்வி! வெண்கலத்துடன் வெளியேறிய இந்தியா
அரையிறுதி ஆட்டத்தில் சீனா தைபேவுக்கு எதிராக இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத நிலையில் வெண்கலத்துடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் தென்கொரியாவில் உள்ள யோங்க் சாங் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்திருந்தது. இதையடுத்து அரையிறுதியில் இந்தியா - சீனா தைபே அணிகள் மோதின. இதில் 0-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்திய அணியில் சரத் கமல், ஜி. சத்தியன் மற்றும் ஹர்ப்ரீத் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
இதில் சரத் கமல் சுயாங் சி ஆகியோருக்கு இடையிலான போட்டியில் சரத் கமல் 6-11, 6-11, 9-11 என தோல்வியடைந்தார்.
இதைத்தொடர்ந்து சத்தியன் - லின் யுன் ஜு உடனான போட்டியில் 5-11, 6-11, 10-12 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். அதேபோல் ஹர்ப்ரீத் 6-11, 7-11, 11-7, 9-11 என்ற தோல்வியடைந்தார். மூன்று வீரர்கள் போராட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும் தோல்வியை கண்டனர். இதனால் இறுதிபோட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்திய ஆண்கள் அணி. அத்துடன் அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.
ஏற்கனவே இந்திய மகளிர் அணியினர் தோல்வியை தழுவி வெளியேறிய நிலையில், இந்திய ஆண்கள் அணி வெண்கல பதக்கத்துடன் நாடு திரும்புகிறது. அத்துடன் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்திய ஆண்கள் அணி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. கடைசியாக தோகாவில் நடைபெற்ற தொடரில் இந்தியா பதக்கம் வென்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்