Asian Armwrestling Cup 2023: ஆசிய கை மல்யுத்த போட்டியில் 9 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள்
ஆசிய அளவிலான கை மல்யுத்தம் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தம் 9 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
ஆசிய கை மல்யுத்தம் 2023 போட்டிகள் உஸ்பெகிஸ்தான் நாட்டிலுள்ள சமர்கண்ட் நகரில் நவம்பர் 17 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் 12 பேர் கொண்ட குழு பிஏஎஃப்ஐ எனப்படும் இந்திய மக்கள் கை மல்யுத்த கூட்டமைப்பு சார்பில் அனுப்பப்பட்டது.
இதையடுத்து இந்த போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 பதக்கங்களை அள்ளியுள்ளனர். இதில் 3 தங்கம், 2 வெள்ளி, நான்கு வெண்கலம் ஆகிய பதக்கங்கள் கிடைத்துள்ளன. பாரா தடகள வீரர் பிவி சீனிவாஸ் தலைமை வகித்த இந்திய அணி தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் முறையாக இந்திய அணியை வழிநடத்திய பாரா தடகள வீரர் என்ற பெருமையை சீனிவாஸ் பெற்றார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக கை மல்யுத்த போட்டியில் விளையாடி வரும் சீனிவாஸ், பிட்னஸ் பயிற்சியாளராகவும் உள்ளார். இவர் 90 கிலோ பாரா பரிவில் வலது மற்றும் இடது கை நிலைகளில் பங்கேற்றார். அத்துடன் இரண்டு நிலைகளிலும் தங்க பதக்கத்தை வென்றார்.
லக்ஷ்மண் 70 கிலோ கிராண்ட மாஸ்டர் பிரிவில் வலது கை நிலையில் தங்கமும், இடது கை நிலையில் வெள்ளியும் வென்றார். பாரா 75 கிலோ எடைப்பிரிவில் வலது கை நிலையில், கிருஷ்ண குமார் வெள்ளி வென்றார். பாரா 85 கிலோ எடைப்பிரிவில் வலது கை நிலையில் ஸ்ரீமந்த் ஜா வெண்கலமும், 50 கிலோ எடைப்பிரிவில் அரிக்மென் லாங்ஷபோங், 60 கிலோ எடைப்பிரிவில் வாண்டா சைமியோங் ஆகியோர் வலது கை நிலையில் வெண்கலம் வென்றுள்ளனர். 55 கிலோ சீனியர் பிரிவில், இடது கை நிலையில் செனெபி சிங்க்லி வெண்கலம் வென்றார். இந்த பாரா போட்டியில் ஒட்டு மொத்தமாக இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்து சாதித்துள்ளது.
இந்திய மக்கள் கை மல்யுத்தம் விளையாட்டு கூட்டமைப்பு தலைவர் ப்ரீத்தி ஜாங்கியானி இந்த வெற்றி குறித்து கூறியதாவது: " ஆசிய கை மல்யுத்த கோப்பை 2023இல் இந்திய கை மல்யுத்த வீரர்கள் வரலாற்றில் தங்கள் பெயர்களை பொறித்துள்ளனர். அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு வெற்றிகளை பெற்று தந்துள்ளது. இந்த வெற்றியால் அவர்கள் நமது தேசத்தின் பெருமையை புதிய உயரத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்" என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்