India at Paris Olympics: 14 வயது நீச்சல் வீராங்கனை முதல் உலக சாம்பியன்கள் வரை - பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய குழு விவரம்
14 வயது நீச்சல் வீராங்கனை முதல் அனுபவம் நட்சத்திரங்கள், சீனியர் மற்றும் ஜூனியர் உலக சாம்பியன்கள் என இந்தியா குழு 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்கவுள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில், 117 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்திய குழுவில் ரோஹன் போபண்ணா, ஷரத் கமல் மற்றும் பிவி சிந்து போன்ற உலகம் அறிந்த முகங்களும் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் கடந்த காலங்களில் பலமுறை ஒலிம்பிக் விளையாடுவதற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களில் ஐந்து பேர் இந்திய குழுவுடன் இந்த முறை பயணிக்கிறார்கள். அத்துடன், இந்திய குழுவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முதல் முறையாக தங்களது ஒலிம்பிக் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
இளம் வயது வீராங்கனை
இந்திய குழுவில் 14 வயதே நிரம்பிய நீச்சல் வீராங்கனை திநிதி தேசிங்கு இடம்பிடித்துள்ளார். இதற்கு முன் ஹெல்சின்கியில் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 11 வயதே நிரம்பிய ஆர்த்தி சாஹா போட்டியிட்டார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் இளவயதில் போட்டியிடும் இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை தேசிங்கு பெறுகிறார்.